இந்த நடிகர் பின்பற்றும் 7 சீக்ரெட்ஸ் தெரியுமா?

இந்த நடிகர் பின்பற்றும் 7 சீக்ரெட்ஸ் தெரியுமா?

டந்த நாற்பத்தைந்து வருடங்களாக பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கி வரும் பிரபல நடிகர் கூறும் ஸ்வென் சீக்ரெட்ஸ் இதோ:

1. நிலாச்சோறு தந்த உறுதி

நான் குழந்தைப் பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ந்தேன். என்னுடைய பாட்டி, எனக்கும், என்னுடைய சகோதர, சகோதரிகளுக்கும் சேர்த்து, நிலாவைக் காட்டி பழைய சாதம் ஊட்டுவார். இதைப் பழையது என்று சொல்வதைவிட அமுதம் என்றுதான் சொல்லவேண்டும். இவ்வுலகத்தில் யார் கையினால் சாப்பிட்டாலும், எவ்வளவு பெரிய ஸ்டார் ஹோட்டலில் உண்டாலும், பாட்டி ஊட்டும் பழைய சோறுக்கு ஈடு இணையில்லை என்பேன் நான். இன்றளவும் எனக்கு உடல் வலிமையும் மன உறுதியும் இருக்கக் காரணமாக இருப்பவன் இவனே!

2. அதிகாலை அதிசயம்

னக்கு பெங்களூருவில் ஏர்-ஃபோர்ஸில் வேலை கிடைத்தது. டிஸிப்ளின் என்றால் அப்படி ஒரு டிஸிப்ளின். அதிகாலை எழுந்து,  பரேடிற்குத் தயாராக வேண்டும். அன்றிலிருந்து இன்றுவரை இப்பழக்கம் தொடர்கிறது. மார்கழி மாதம் மட்டுமல்லாமல் அனைத்து மாதங்களிலும் அதிகாலை எழுந்து விடுகிறேன்.. ஆரோக்யமாக இருக்கிறேன்.  இது அனுபவம் தந்த பாடம்.

3. தண்டனை தந்த உடல் பலம்

விமானப் படையில் டிரெயினிங்கில் இருந்தபோது சிறு தவறு செய்தால்கூட தண்டனை தருவார்கள். பெரும்பாலும் தண்டனை என்பது துப்பாக்கியைத் தலைமேல் வைத்துக்கொண்டு மைதானத்தைப் பல சுற்றுக்கள் ஓடச் சொல்லுவார்கள். இது தண்டனை என்று அப்போது நினைத்தேன். ஆனால், பரிசு என்பது இப்போது புரிகிறது. அன்று ஒடியது இன்று உடல் வலுவாக இருக்க உதவி செய்கிறது.

4. ஓட முடியலைன்னா நடக்கவாவது செய்யணும்

நான் தினமும் எங்கள் வீட்டுப் பக்கத்துல இருக்கிற சிவன் பார்க்கில் நடக்கிறேன். இதன் மூலமா நிறைய நண்பர்கள் கிடைக்கிறாங்க. ஹெல்த் தொடர்பா நிறைய அட்வைஸ் பண்றாங்க. நானும் அட்வைஸ் பண்றேன். மனபாரம் குறையுது. நீங்களும் நடங்க. நண்பர்கள் கிடைப்பாங்க. மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.

5. பலம் தரும் சைவ உணவு

ன் அனுபவத்தில் சைவ உணவு பலத்தையும், ஆரோக்கியத்தையும் தருவதாக உணர்கிறேன். ஏர்ஃபோர்ஸில் இருந்தபோதும்,  சினிமாவில் இருக்கும்போதும் சைவ உணவை மட்டுமே உண்கிறேன். ஷூட்டிங் உள்ளூரில் நடந்தால், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போய்விடுவேன். வெளியூர் என்றால் அங்கே உள்ள வெஜிடேரியன் ஹோட்டலைத் தேடிக் கண்டுபிடித்து விடுவேன். சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் கவலையே பட வேண்டாம். உடல் பலம் கியாரண்டி.

6. கீரையைப் பார்த்தா விட மாட்டேன்

ங்க தாத்தா தினமும் கீரை சாப்பிடுவார். எங்களையும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார். 'என்ன தாத்தா தினமும் கீரையா' என்று நான் அலுத்துக் கொள்வேன். 'உன் காலத்துல கீரை கிடைக்குதான்னு பாரு’, என்று சொல்லுவார் தாத்தா. தாத்தா ஒரு தீர்க்கதரிசி. தாத்தா சொன்னது முற்றிலும் உண்மை. இன்று தெரிந்த காய்கறிகாரர்களிடம் சொல்லி வைத்து கீரைக் கட்டு வாங்க வேண்டியுள்ளது. வாரம் இருமுறையாவது கீரை சேர்த்துக்குவேன். கீரை தராத பலத்தையும், ஆரோக்கியத்தையும் வேறெந்த உணவும் தராது.

7. புண்பட்ட மனதுக்கு யோகா

சில காலம் எனக்கு புகைப் பழக்கம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் நானும் சிவகுமாரும் 'மாரியம்மன் திருவிழா' என்ற படத்தில் நடித்தோம். ஸ்பாட்டில் நான் சிகரெட் பிடிப்பதை சிவகுமார் சார் பார்த்துவிட்டார். ‘ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க?’ என்று கேட்டார். நான் ஒரு கணக்கு சொன்னேன். சொன்னவுடன் என்னை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. அந்தக் கேள்விகளின் விளைவாக படிப்படியாக சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டேன். யோகாவும் கற்றுக்கொண்டேன். இன்று ஆரோக்கியமாக இருக்கிறேன். புகைப்பதும், மது அருந்துவதும் மனக்காயங்களுக்குத் தீர்வாகாது. யோகாவும், தியானமும் மனதையும், உடலையும் பக்குவப்படுத்தும். கெட்ட பழக்கங்களிலிருந்து நம்மை திசை திருப்ப பெரிதும் உதவும்.

மேற்குறிப்பிட்ட 7 சீக்ரெட்ஸுக்கு சொந்தக்காரர் இவர்தான்:

நடிகர் டெல்லி கணேஷ்
நடிகர் டெல்லி கணேஷ்

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com