பிறர் நலம் பேணுவதால் உண்டாகும் பத்து நன்மைகள் தெரியுமா?

பிறர் நலம் பேணுவதால் உண்டாகும் பத்து நன்மைகள் தெரியுமா?

பிறருக்கு உதவுதல் என்பது மிகச்சிறந்த ஒரு பண்பு. செய்யும் உதவி சிறிதோ பெரிதோ, ஆனால் சூழலுக்கு ஏற்ப அது முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. முழு மனதோடு ஒருவருக்கு உதவி செய்யும்போது நம் உடல், மனம் இரண்டும் பெறும் நன்மைகள் பற்றியதே இந்தப் பதிவு.

1. பிறருக்கு உதவும்போது நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த மகிழ்ச்சி  உடல்நிலையை நன்றாக இயங்கச் செய்கிறது. நமது மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

2. பிறருக்கு உதவுவதன் மூலம் நமக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இதனால் தனிமை உணர்வு அறவே நம்மை விட்டு விலகி விடும். நமக்காக நண்பர்கள் இருக்கிறார்கள் எனும் தெம்பும் மனதில் வரும்.

3. தேவைப்படும் ஒருவருக்கு பணமாகவோ, பொருளாகவோ அல்லது உடல் உழைப்பின் மூலமோ உதவும் போது, ‘கடவுள் மாதிரி வந்து என் கஷ்டத்தில் கை கொடுத்தீங்க’ என்று அவர்கள் சொல்லும் சொற்கள் வெற்று வார்த்தைகள் அல்ல. அவை உதவி புரிந்தோருக்கு முழுத் திருப்தியைத் தரும்.

4. நம்மை விட பொருளாதாரத்திலோ ஆரோக்கியத்திலோ குறைந்தவர்களுக்கு நாம் உதவும்போது, அவர்களை விட நம்மை கடவுள் நன்றாக வைத்திருக்கிறார் என்ற  நேர்மறையாக சிந்தனை உருவாகும்.

5. உதவுதல் என்கிற குணம் ஒரு தொற்று நோயைப் போல, ஒருமுறை உதவ ஆரம்பித்து விட்டால் அது தொடர்ந்து நம்மை உதவச் செய்யத் தூண்டும்.

6. ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்று நம்மிடம் உதவி பெற்றோர் நம்மை வாழ்த்தும்போது அந்த ஆசீர்வாதம் நமது ஆயுளை நீட்டிக்கக் கூடும். இது மனச்சோர்வை அகற்றி நம்மை ஆரோக்கியமாக வைக்கும்.

7. பிறருக்கு உதவும்போது நமக்கு நாமே உதவிக்கொள்கிறோம். இதனால் நம்மை நாமே  விரும்ப ஆரம்பித்து விடுவோம்.

8. பிறருக்கு உதவுவதால் நம்மைப் பற்றிய சுயமதிப்பீடு கூடும். நமது தன்னம்பிக்கையின் அளவும் உயர்ந்துவிடும்.

9. மற்றவர்க்கு உதவி செய்வதன் மூலம் நாம் ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடுவோம். நம்மைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, நமது நண்பர்களும் பிறருக்கு உதவ ஆரம்பிக்கிறார்கள். இதனால் நண்பர்களிடத்தில் நல்ல நேர்மறையான அதிர்வை உண்டாக்குகிறோம்.

10. நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. பிறருக்கு உதவி செய்வதற்காகவே நாம் வாழ வேண்டும் என்கிற எண்ணம், சமுதாயத்தில் நமது பங்களிப்பை இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.

விபத்தில் சிக்கிய அல்லது அறுவை சிகிச்சைக்குக் காத்திருக்கும் நபருக்கு இரத்த தானம் செய்வதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்றலாம். தானமாகப் பெறப்பட்டு, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் நமது ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றலாம். தற்போது உடல் உறுப்பு தானம் என்பது பரவலாகி வருகிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com