
‘உனக்கு பித்தம் தலைக்கு ஏறிடுச்சு’ என பிறரிடம் நகைச்சுவையாகக் கூறுவதுண்டு. பித்தம் என்ற வார்த்தையை நாம் ஒருமுறையாவது கேள்விப்பட்டிருப்போம். நாம் சாதாரணமாகச் சொல்லும் இந்தப் பித்தம்தான் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் நம்புவீர்களா?
ஆம், கல்லீரலில் சுரக்கும் ஒரு மஞ்சள் நிற நீரைத்தான் பித்தம் என அழைக்கிறார்கள். நமது உடலில் செரிமானத்துக்கு இது மிகவும் முக்கியமானதாகும். இதன் சுரப்பு சீராக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதன் அளவு கூடும்போதுதான் உடலில் பல பிரச்னைகள் ஏற்படத் தொடங்கும். உடலில் பித்தநீர் அதிகரித்தால் கண் எரிச்சல், தலைவலி, தொண்டை வலி, வயிற்றுப்புண், சிறுநீர் பாதை தொற்று, இதய பாதிப்புகள் என பல பிரச்னைகள் தோன்றும்.
உடலில் பித்த நீர் அதிகரிப்பதற்கு இந்த நவீன காலத்தில் நாம் அதிகம் விரும்பிச் சாப்பிடும் துரித உணவுகளே காரணமாக உள்ளன. இதனால் உடல் சூடு அதிகரிப்பதால் பித்தமும் அதிகரிக்கிறது. மேலும், அதிகமான போதை பொருட்களின் பயன்பாடு, முறையான தூக்கமின்மை, அதிகம் டீ காபி பருகுவது என பல விஷயங்கள் பித்த நீர் சுரப்பு அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றன.
பித்த நீர் சுரப்பை கட்டுப்படுத்த சீரகம், இஞ்சி சேர்த்து சூரணமாக எடுத்துக்கொள்வது நல்லது. இந்த சூரணம் செய்வது எளிதானது தான். இஞ்சி 50 கிராம், சீரகம் 20 கிராம், பனங்கற்கண்டு 20 கிராம், நெய் சிறிதளவு.
முதலில் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து, தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் சீரகத்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பனங்கற்கண்டு சேர்த்து பொடியாக்கி ஒரு பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கலவையை காலை மாலை என சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் உடலில் பித்த நீர் சுரப்பு சீராகும். இது தவிர, பூசணிக்காய் மற்றும் உலர்ந்த திராட்சையை சாப்பிடுவதாலும் பித்தநீர் சுரப்பை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.