நீங்கள் பிள்ளைகளுக்குப் பிடித்த பெற்றோர் ஆகணுமா?

நீங்கள் பிள்ளைகளுக்குப் பிடித்த பெற்றோர் ஆகணுமா?

‘என்ன செஞ்சா என் பிள்ளைகளுக்கு என்னைப் பிடிக்குமோ தெரியலை?’ எனப் புலம்பும் பெற்றோரா நீங்கள்? பிள்ளைகளின் மனம் கவர உங்களுக்கான சில எளிய ஆலோசனைகள் இந்தப் பதிவில்.

1. மற்றவர்களுடன், முக்கியமாக அவர்களின் நண்பர்களுடன் அவர்களை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

2. அவர்களிடமே அவர்கள் செய்த நல்ல செயல்களை பாராட்டி பேசுங்கள். இந்தப் பாராட்டினால் உங்கள் மீது நல்ல மதிப்பு தோன்றி, மேலும் நல்லது செய்ய முயற்சி செய்வார்கள்.

3. அவர்களின் செயல்கள் பாராட்டும்படி இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர்கள் விரும்பும் சிறு சிறு பரிசுகளைக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

4. அவர்கள் பார்வை படும் இடங்களில் அப்பரிசுகளை பத்திரப்படுத்துமாறு அவர்களிடம் கூறுங்கள். அதை அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நல்ல செயல் நினைவு வந்து அதிகம் மகிழ்ச்சியுடன் உற்சாகம் பெறுவார்கள்.

5. மதியம் இடைவேளை உணவு எடுத்துச் செல்பவராக இருந்தால் அவர்களே அறியாமல் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை, தின்பண்டங்களை கொடுத்து அனுப்புங்கள். அவர்கள் மனதுக்குப் பிடித்த உணவு வகைகள் அன்றைய தினத்தை உற்சாகப்படுத்தும்.

6. கொஞ்சம் சிரமம் எடுத்து புதுப்புது உணவு வகைகளை செய்து அசத்துங்கள். வயிறு நிறையும்போது உங்கள் மீதான பிரியமும் பெருமையும் அதிகரிக்கும்.

7. மற்றவர்களுக்காக உதவிகள் செய்வதன் மூலமும் உங்களின் தனித் திறமைகளை வளர்த்து அவர்களுடன் ஒன்றாகக் கலந்து பழகியும் அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க முயலுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் உங்கள் பிள்ளைகளும் இருப்பார்கள்.

8. யாருக்காவது அன்பளிப்பு கொடுப்பதாய் இருந்தால் அவர்களையே பரிசு பொருளை தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். பரிசுப் பொருளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கையினாலே அதை அளிப்பதால் அவர்களுக்கு பகிரும் பழக்கமும் வரும். பணம் பற்றிய மதிப்பும் புரியும்.

9. எல்லாவற்றிற்கும் அவர்களையும் கலந்து ஆலோசியுங்கள். (அவர்கள் வயதுக்கு ஏற்றவற்றில் மட்டும்) தங்களை முதன்மைப்படுத்துவதால் அவர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவார்கள்.

10. அவர்களின் நண்பர்களையும் உங்கள் பிள்ளைகளாக நினைத்து அவர்களிடம் அன்பாகப் பழகுங்கள். அவர்கள் உங்களைச் சுற்றி வந்தாலே உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் மேல் மதிப்பும் கூடும்.

முக்கியமாக, பிள்ளைகள் உங்களிடம் மனம் விட்டு பேசும்போது மறுத்து அதட்டாமல் அவர்களுக்கும் கருத்து சுதந்திரம் அளித்து அவர்களின் எண்ணங்களுக்கு மரியாதை கொடுங்கள். அதேநேரம் அந்த சுதந்திரம் எல்லை மீறி போகாதவாறு கண்காணியுங்கள்.

தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட பிள்ளைகளை தோழனாக, தோழியாக நினைத்து அவர்களிடம் பழகினால் அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை விட, பிரியத்துடன் உங்கள் பேச்சைக் கேட்பார்கள் என்பது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com