என்னது! வெந்தய டீ முடி உதிர்வதைத் தடுக்குமா?
இயற்கையாகவே வெந்தயம் உடலின் ஆக்சிஜனேற்றங்களுக்கு உதவுவதுடன், இரும்புச்சத்து, புரதம் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தற்போதைய காலத்தில் பெரும்பாலானவர்களுமே தங்களது முடியைப் பற்றி கவலை கொள்கிறார்கள். ‘அதிக முடி வளர என்ன செய்யலாம், முடி கொட்டாமல் இருக்க என்ன செய்வது’ போன்ற பல கேள்விகளை யோசித்துக்கொண்டே இருக்கின்றனர்.
இந்த நிலையில், உடலை குளிர்ச்சியாக வைத்திருந்தாலே முடி உதிர்வு நின்றுவிடும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வெந்தயம் பயன்படுவதாகச் சொல்லப்படுகிறது. தினசரி வெந்தய டீ போட்டு குடித்தால் இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.
வெந்தயத்தில் இருக்கும் இரும்புச்சத்து, புரதம் போன்றவை முடி வளர்ச்சியைத் தூண்டி, உச்சந்தலையில் முடி உதிர்வு மற்றும் பொடுகுத் தொல்லையை சமாளிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் வெந்தயத்தை ஒரு நபர் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், 6 மாதத்தில் அவரது தலை முடியின் தன்மை மேம்படுவதைக் கண்டறிந்துள்ளனர். காலப்போக்கில் அவருக்கு முடி உதிர்வும் குறைந்துள்ளது. வெந்தய விதையில் உள்ள சில பண்புகள் மன அழுத்தத்தைக் குறைத்து, உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கிறது. இத்தகைய பண்புகள் பொடுகு, எரிச்சலூட்டும் சருமம் போன்ற பல சிகிச்சைகளுக்கு நிவாரணமாகிறது.
வெந்தயத்தின் சுவை பலருக்கு பிடிக்காததால் இதை சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். ஆனால், வெந்தயத்தை டீ போட்டு குடித்தால் அதன் நன்மைகளை ஒருவர் முழுமையாகப் பெற முடியும். இந்த டீ செய்வது மிகவும் எளிது. வெந்தய விதைகளை முன்நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை சூடாக்கி டீ போல பருகலாம். அல்லது ஊறவைத்த வெந்தய நீரை அப்படியே குடிக்கலாம்.
வெந்தய டீயை காலை நேரத்தில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது என நிபுணர்கள் சொல்கிறார்கள். அத்துடன் இந்த டீயைக் குடிப்பது உங்கள் வயது, மருத்துவ நிலை மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டதாகும். இதற்கு ஒரு நிபுணரை அணுகி அதன்படி செயல்படுவது சிறந்தது.