
வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் ஒரு அற்புத மருந்தாகும். விலை குறைவான பட்டியலில் வெந்தயமும் ஒன்று. அதை நாம் வெறும் வாயிலும் சாப்பிடலாம், குழம்பில் போட்டும் சாப்பிடலாம். எந்த வகையில் வெந்தயம் உடலுக்குள் சென்றாலும் அவ்வளவு நன்மைகளை அளிக்கிறது. வெந்தயத்தை அரைத்து பலரும் தலையில் கூட தேய்ப்பார்கள். அந்த அளவுக்கு வெந்தயம் நமக்கு நன்மை செய்கிறது. அமிர்தமே ஆனாலும் அது அதிகமானால் நஞ்சு என்று சொல்வார்கள். அப்படித்தான் வெந்தயமும். இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவுக்கு அது அதிகமானால் கெடுதலும் விளைவிக்கிறது.
வெந்தயம் குளிர்ச்சித் தன்மை கொண்டது என்பதால் உடல் ஆரோக்கியக் குறைபாடு இருக்கும் காலங்களில் இதை எடுத்துக்கொண்டால் இது மூச்சுத்திணறல் பிரச்னையை ஏற்படுத்தி விடும். குறிப்பாக, சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் வெந்தயத்தைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை. உணவில் பயன்படுத்தும்போது பெரிதாக பிரச்னை நேராது. ஆனால், தனியாக சருமத்துக்கு, கூந்தலுக்கு உள்ளுக்கு என்று எடுக்கும்போது இதன் குளுமை உடலில் அதிகரிக்கும். அதுவும் மழைக்காலங்களில் வெந்தயத்தை தொடவே கூடாது.
நீரிழிவு இருப்பவர்களுக்கு வெந்தயம் அருமருந்து என்று சொல்வதுண்டு. ஆனால், மூலிகை குணங்களைக் கொண்டிருக்கும் இயற்கை மருந்துகளை எடுத்துகொள்பவர்கள் மருந்து சாப்பிடும் நாட்களில் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும். இதனால் தலைச்சுற்றல் பிரச்னை உண்டாகக்கூடும். சரி, வெந்தயத்தை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது?
அது ஒவ்வொருவர் உடல்நிலையைப் பொறுத்து அவர்கள் அன்றாடம் எடுத்துகொள்ள வேண்டிய அளவை தீர்மானிக்கலாம். கொழுப்பு சத்து உடலில் அதிகமாக இருந்தால் அவர்கள் தினசரி 10 முதல் 30 கிராம் வரை வெந்தயத்தை எடுத்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது.