உச்சி முதல் பாதம் வரை நிவாரணம் தரும் விளக்கெண்ணெய்!

உச்சி முதல் பாதம் வரை நிவாரணம் தரும் விளக்கெண்ணெய்!

ந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கைக்குழந்தைகள் உள்ள வீடுகளில் அவசியம் இடம்பெறும் ஒரு மருத்துவப் பொருள் விளக்கெண்ணெய். ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் விளக்கெண்ணெய் மகத்தான மருத்துவப் பலன்கள் கொண்டது. சமையல் முதல் மருத்துவம் வரை பயன்படும் இந்த எண்ணெய் அடர்த்தியாகவும் பிசுபிசுப்பாகவும் இருப்பதால் இதனை கவனிக்க மறுக்கிறோம். ஆனால், பலவிதமான உடல் பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் எண்ணெய் வகைகளில் முதன்மையான இடத்தில் உள்ளது விளக்கெண்ணெய். பல்வேறு வகைகளில் உபயோகப்படும் விளக்கெண்ணெயின் ஒருசில பலன்கள் குறித்துக் காண்போம்.

1. இளம் பெண்கள் முதல் அனைவரும் அழகிய கண் இமைகளுக்கு ஆசைப்படுவார்கள். அவர்கள் தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன் விளக்கெண்ணெயை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் அழகான இமை ரோமங்கள் வளர்ச்சி பெறும்.

2. கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயில் உள்ள ஒமேகா-9 எனும் கொழுப்பு அமிலங்கள் உதவுவதால் சிறு குழந்தையிலிருந்தே வாரம் ஒரு முறையாவது தலைமுடியின் வேர்கால்களில் படும்படி இந்த எண்ணெயை அழுந்தத் தேய்த்து மசாஜ் செய்து ஊறவைத்து தரமான ஷாம்பு போட்டு அலசுவது நல்லது.

3. விளக்கெண்ணெயை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடி வறட்சி நீங்கி மென்மையாவதுடன் தலைவலி , பொடுகு, இளநரை போன்ற  பிரச்னைகளும் நீங்கும்.

4. விளக்கெண்ணையை உள்ளுக்குத் தருவது என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். சரியான முறையில் விளக்கெண்ணெயை உள்ளுக்கு எடுத்துக்கொள்வதால், குடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும், புழுக்களையும் அழித்து, மலச்சிக்கலை தீர்க்கும் மாபெரும் இயற்கை நிவாரணியாகிறது.

5. அன்று நம் பாட்டிமார்கள் வயிறை சுத்தம் செய்ய இரவு நேரத்தில் வாழைப்பழத்துடன் இந்த எண்ணையை கலந்து உண்டார்கள். ஆனால், இந்த எண்ணெய் குளிர்ச்சித் தன்மை கொண்டதால் உள்ளுக்கு எடுக்கும்போது தகுந்த நிபுணரின் ஆலோசனையின்றி எடுப்பதைத் தவிர்க்கவும்.

6. வயிற்று சூட்டையும் கண் சூட்டையும்  தணிப்பதில் விளக்கெண்ணெய் தனி இடம் பெறுகிறது. வயிறு இழுத்துப் பிடித்தால் தொப்புளில் தூய விளக்கெண்ணெய் ஒருசில சொட்டுகள் விடுவது நமது முன்னோர் பழக்கம். (இன்று கலப்படம் இருப்பதால் கவனம் முக்கியம்.)

7. மூட்டு வலிக்கு இந்த எண்ணெய் சிறந்த நிவாரணியாக உள்ளது. இரவு படுக்கும் முன்பு இந்த எண்ணையை லேசாக சூடு செய்து மூட்டுப் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்தால் சரும துவாரங்கள் வழியே இறங்கி மூட்டுகளின் உராய்வைத் தடுத்து வலியைக் குறைக்கும்.

8. அழகு சாதனப் பொருட்களில் இந்த எண்ணெய்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வறண்ட சருமம் கொண்டவர்கள் இந்த எண்ணெயுடன் மஞ்சள் தூள் அல்லது பயத்த மாவு போன்ற ஏதாவது ஒன்றைக் கலந்து முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து கழுவினால் வறட்சி நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

9. கணினியின் மூலம் வேலை செய்வோர் பெரும்பாலானவர்களுக்கு கண்களின் கீழ் கருவளையம் இருப்பது சகஜம். இதைத் தவிர்க்க இரவு படுக்கும் முன்பு விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி உள்ள கருவளையத்தின் மீது (பத்து நிமிடங்கள்) வட்ட வடிவமாக தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் புத்துணர்வு பெறும்.

10. சமயத்தில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை ஒவ்வாமை வறட்சி காரணமாக சருமத்தில் அரிப்பு போன்றவைகள் ஏற்படும் . தூய விளக்கெண்ணெய்யை  அரிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் வறட்சியினால் ஏற்பட்ட அரிப்பு விலகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com