ஒற்றைத் தலைவலி காரணமும் தற்காப்பும்!

ஒற்றைத் தலைவலி காரணமும் தற்காப்பும்!

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி ஆண்களை விட, பெண்களையே அதிகம் தாக்குகிறது. இது சாதாரண தலைவலி  போல் இருக்காது. பெரும்பாலும் தைலம் தடவினாலோ, மாத்திரை போட்டாலோ ஒரு மணி நேரத்தில் சரியாகும் தலைவலி போல இல்லாமல், ஒற்றைத் தலைவலி ஒரு நாள் முழுக்கவோ அல்லது இரண்டு நாள் முழுக்கவோ பாடாய்ப்படுத்தி விட்டுத்தான் ஓயும்.

எட்டு வருடங்களாக என்னுடன் கைகோர்த்துக்கொண்ட மைக்ரேன், மாதம் ஒரு முறையோ இரு முறையோ அழையா விருந்தாளியாக வந்து என்னுடன் தங்கி விடும். அப்போதெல்லாம் வாந்தி, தலைசுற்றல், தலையின் இரு புறமும் சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி, கண்கள் மீது செங்கல்லை வைத்தது போன்ற உணர்வும் ஏற்படும். எனது தோழியர் சிலருக்கும் இந்தத் தொல்லை இருக்கிறது. முகம் அறியா தோழிகளுக்கும், தோழர்களுக்கும் கூட இந்தப் பிரச்னை இருக்கலாம். என் அனுபவத்தில் எந்த மாதிரியான சூழலில் எனக்கு மைக்ரேன் வருகிறது, அந்த மாதிரி நேரங்களில் என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் தெளிவாக அறிந்துள்ளேன்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, சரியான சமயத்தில் சாப்பிடாதது, கார், பஸ் பயணங்களில் ஜன்னலை ஏற்றி விட்டு காற்றில்லாமல் இருப்பது, இரவு சரியான தூக்கம் இல்லாதபோது, அதிக மன அழுத்தம் இருக்கும்போது, அதிக சத்தம், இரைச்சல் போன்றவை ஒற்றைத் தலைவலியை கைப்பிடித்து அழைத்து வந்து விடும்.

முட்டை, மாமிச உணவுகள், சிட்ரஸ் அதிகமுள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, புளி சேர்த்த உணவுகள், பீட்ரூட், முள்ளங்கி, முருங்கைக்கீரை, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், காபி, புரோட்டீன் அதிகமுள்ள சுண்டல், பருப்பு வகைகள், எண்ணையில் பொறித்த மற்றும் மசாலா உணவுகள், பேக்கரி வகைகள், பிரியாணி, பரோட்டா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கவே செய்யும்.

நீர்க்காய்களான சுரைக்காய், பீர்க்கை, புடலை, மோர் சாதம், அரிசிக்கஞ்சி போன்றவை தலைவலியைக் குறைக்கும். செல்போன், டி.வி, கணினி பயன்பாட்டை அறவே தவிர்த்து விட வேண்டும். புத்தகம் வசித்தலும் கூடாது. கண்களுக்கு முழுமையான ஓய்வு அவசியம். மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மனத்தை அமைதியாக வைக்க வேண்டும். இரவு சீக்கிரமே உறங்க வேண்டும். மறுநாள் காலையில் விழித்தெழும்போது மைக்ரேன் போயே போயிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com