எதிர்காலத்தை வளமாக்கும் நேர்மறை சிந்தனைகள்!

எதிர்காலத்தை வளமாக்கும் நேர்மறை சிந்தனைகள்!

ள்ளியிலிருந்து திரும்பிய இளம் சிறுவன் தனது வகுப்பு ஆசிரியர் கொடுத்த ஒரு கடிதத்தை தனது அம்மாவிடம் கொடுத்தான். அந்தக் கடிதத்தை படித்த அம்மாவின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.

“என்னம்மா? என்ன இருக்கிறது கடிதத்தில்? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?” என்று மழலைத்தனமாகக் கேட்டான் அந்தச் சிறுவன்.

‘இல்லை’ என்று கூறி, நடுங்கும் குரலில் கடிதத்தைப் படித்தார் அந்தத் தாய். ‘உங்கள் மகன் பெரிய அறிவாளி. அவனுக்குக் கற்றுத் தரும் அளவுக்கு எங்கள் பள்ளியில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. எனவே, நீங்களே உங்கள் மகனுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுங்கள்.’

அந்தச் சிறுவனுக்கு ஒரே குழப்பம். மறுநாள் அந்தத் தாய் தனது மகனை பள்ளிக்கு அனுப்பாமல், தானே பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.

அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில், ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ என்று உலகமே வியந்த மேதை. அந்தத் தாயின் பெயர், ‘நான்சி எடிசன்.’

வருடங்கள் பல ஓடியது. தாமஸ் ஆல்வா எடிசன் தனது வாழ்வில் பெரும் சாதனைகள் புரிந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள். உலகமே அவரை, ‘கண்டுபிடிப்புகளின் தந்தை’ எனப் பாராட்டியது. அவரது அம்மாவும் காலமானார். ஒரு நாள் அவர் தனது அம்மாவின் அலமாரியில் எதையோ தேடியபோது, சிறு வயதில் பள்ளி ஆசிரியர் அவரிடம் கொடுத்த அந்தக் கடிதம் கண்ணில்பட்டது.

அதைப் பிரித்துப் படித்தவர் அப்படியே உறைந்து போனார். ‘உங்கள் மகன் மன வளர்ச்சி குன்றியவர். மனநிலை சரியில்லை. பள்ளியில் எங்களால் அவனை வைத்துக் கொண்டிருக்க முடியாது. பள்ளியிலிருந்து நீக்குகிறோம்’ என்றிருந்தது.

‘தனது தாய் தம்முடைய சமயோசிதத்தால் தம் வாழ்வைக் காப்பாற்றி, தனக்கு வளமான எதிர்காலத்தை அமைத்து கொடுத்து இருக்கிறார்’ என்று உணர்ந்தார் தாமஸ் ஆல்வா எடிசன்.

பள்ளியில் கொடுத்தனுப்பிய கடிதத்தை, அப்படியே படித்திருந்தால் தனது எதிர்காலமே சிதைந்திருக்கும் என்று அவருக்குப் புரிந்தது. தனது அன்னையின் தியாகத்தை உணர்ந்து வெகு நேரம் உறைந்துபோய் அழுதார் எடிசன். அதன் பிறகு, தனது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார், ‘Thomas Edison was a mentally ill child whose mother turned him into a genius of this century.’

இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் பாடம்: தவறான, எதிர்மறையான வார்த்தைகள் ஒருவரது வாழ்வையே சிதைத்து விடும். நல்ல, நேர்மறையான உற்சாகமூட்டும் சொற்கள் ஒருவரின் வாழ்வில் உத்வேகம் கொடுத்து சிறக்கச் செய்யும். உற்சாகமூட்டும், நல்ல சொற்களால் நம்மைச் சுற்றி ஒரு அன்பு வட்டத்தை உருவாக்குவோம். மற்றவரின் தாழ்வு மனப்பான்மையை மாற்றி, வளமான வாழ்வுக்கு வழிவகுப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com