
ஒரு காலத்தில் ஆண்கள் என்றாலே தாடி இல்லாமல் கிளீன் ஷேவ் என்ற நிலை மாறி, இப்போது தாடி வைத்திருந்தால்தான் ஆண்மைக்கு அழகு என்ற காலத்துக்கு வந்துவிட்டோம். தற்போது தாடி வைப்பது ஆண்களுக்கு பேஷனாக மாறிவிட்டது. ஆனால், மழைக்காலத்தில் தாடி வளர்க்க ஆசைப்படும் ஆண்கள் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை. அவை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தாடி வளர்க்க விரும்பும் ஆண்கள் முதலில் பருவ காலங்களில் உங்கள் முகத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பருவ காலத்திலும் நம் சருமத்தில் சில மாற்றங்கள் நிகழும். மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அது பல மாற்றங்களை முகத்தில் ஏற்படுத்தும். குறிப்பாக, அந்த சமயத்தில் நோய்த்தொற்று அபாயம் இருப்பதால் சருமத்தைப் பாதுகாப்பது அவசியம். முதலில் உங்கள் சருமத்தை நீங்கள் பாதுகாத்தால்தான் அதில் வரும் தாடியை பாதுகாக்க முடியும்.
நீங்கள் எப்போதும் நேரமில்லாமல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நபராக இருந்தால், மழைக்காலங்களில் உங்களது தாடி மற்றும் உடல் ரோமங்களைப் பராமரிக்க முடியாமல் போகலாம். இத்தகைய நபர்கள் தாடியை கிளீன் ஷேவ் அல்லது ட்ரிம் செய்வது நல்லது. ஏனென்றால், மழைக்காலத்தில் ஒருவர் நீளமாக தாடி வளர்த்தால் அது அழுக்கு மற்றும் தூசியை ஈர்க்கும். இவை வியர்வையுடன் கலக்கும்போது பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
மழைக்காலத்தில் தாடியை பராமரிக்க விரும்பும் ஆண்கள், அவ்வப்போது அதனை ஷாம்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். தாடியில் அழுக்கு, வியர்வை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். நன்கு சுத்தம் செய்ததும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மென்மையாக மசாஜ் செய்துகொள்வது நல்லது. இது உங்கள் தாடியின் உள்ளே ஏற்படும் தோல் அரிப்பு மற்றும் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
மழைக்காலத்திலும் சில ஆண்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அல்லது சிலர் ஷேவ் செய்தால் அவர்களின் சரும் வறண்டு போக வாய்ப்புள்ளது. அத்தகைய ஆண்கள் அரிப்பு, தோல் அலர்ஜி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களின் சருமத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், தோல் வறண்டுபோய் சேதமாக வாய்ப்புள்ளது. இவர்கள் நல்ல மாய்ஸ்டரைசரைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, இணையத்தில் விற்கும் பியர்டு ஆயில் போன்றவற்றை உங்கள் தாடிக்கு மழை காலத்தில் பயன்படுத்த வேண்டாம்.
மேற்கண்ட விஷயங்களை நீங்கள் மழைக்காலத்தில் பின்பற்றினாலே, உங்கள் தாடியை நல்ல முறையில் பராமரிக்க முடியும். இத்துடன் நல்ல உணவு முறையை நீங்கள் பின்பற்றும்போது தாடியின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.