விரல்களில் சொடக்கு எடுப்பது ஆபத்தா?

விரல்களில் சொடக்கு எடுப்பது ஆபத்தா?

சிலர் டென்ஷனாக இருக்கும்போது கை விரல்களில் சொடக்கு எடுப்பதை பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால், உங்களுக்குப் புத்துணர்ச்சி தரும் இந்தப் பழக்கம் சில சமயம் உங்களுக்கே ஆபத்தாக மாறலாம் என்ற கருத்துகள் நிலவுகின்றன. நீங்கள் உங்கள் விரல்களை சொடக்கு எடுக்கும்போது அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என எப்போதாவது யோசித்ததுண்டா?

நாம் விரல்களில் சொடக்கு எடுக்கும்போது விரல் மூட்டுகளில் இடைவெளி உருவாகிறது. அதாவது, மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவம் உருவாக்கிய வாயுக் குமிழ்களை (gas bubbles) உடைப்பது போன்றதாகும். ஒரு விரலில் ஒரு முறை மட்டுமே சொடக்கு எடுக்க முடியும். உடனே உடைக்க நினைத்தால் சொடுக்கு சத்தம் கேட்காது. ஏனெனில், அந்த வாயு குமிழ் மூட்டுகளில் மீண்டும் உருவாக சில மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

இவ்வாறு விரல்களில் சொடக்கு எடுப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும், சிலர் எடக்கு மடக்காக அல்லது பலமான அழுத்தத்துடன் சொடக்கு எடுத்து மூட்டு இடம் மாறியதாகவும், தசை நார்களில் காயம் ஏற்பட்டதாகவும் அறிக்கைகள் உள்ளன. ஆனால், இது மிகவும் அரிதாக நிகழக்கூடியதாகச் சொல்லப்படுகிறது.

கலிஃபோர்னியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனக்கு தானே இந்த பரிசோதனையை செய்து ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘விரல்களில் சொடக்கு எடுப்பது எந்த வகையிலும் பாதிக்காது’ என்று கூறியுள்ளார். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு கையில் மட்டுமே சொடக்கு எடுத்துள்ளார். பிறகு அவர் தனது கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எந்தவித மாற்றங்களும் இல்லை. விரல்களுக்கு இடையிலோ, கை எலும்புகள், மூட்டுகளிலோ எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

அதேசமயம், மிகவும் அரிதாக நெட்டி முறித்தலால் சில நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பது உண்மைதான் என்றாலும், அது சொடக்கு எடுக்கும் பழக்கத்தால் இல்லை என்கிறது அந்த ஆய்வு. மேலும், ஒருவர் எப்படி அழுத்தம் கொடுத்து சொடக்கு எடுக்கிறார் என்பது, அவர் சொடக்கு எடுக்கும் டெக்னிக்கை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது’ என்றும் அவர் கூறுகிறார்.

1990ம் ஆண்டு 226 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில், சொடக்கு எடுப்பதை பழக்கமாகக் கொண்ட 74 பேர்களின் விரல்களில் பிடிப்பின் பலம் குறைவாகவும், கை வீக்கமாகவும் இருந்துள்ளது. மற்றவர்கள் சிலருக்கு கீழ்வாதம் பாதிப்பு மற்றும் சில பிரச்னைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சொடக்கு எடுக்கும்போது எப்படி சத்தம் வருகிறது என்பதற்கு உறுதியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ‘எலும்புகளுக்கு கீழே உள்ள முழங்காற்சில்லு உரசும்போது சத்தம் வரலாம்’ என்று கூறப்படுகிறது. பொதுவாக, சொடக்கு எடுப்பதால் பெரிதாக எந்த பாதிப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com