
“ஆடி முடிந்து ஆவணி பொறந்தாச்சு. ஏதாவது நல்ல சேதி உண்டா? பக்கத்து ஊர் மாமா நாலு நாளைக்கு ஒரு முறை போன் பண்ணிக் கேட்கிறார். என்ன பதில் சொல்றதுன்னு சங்கடமா இருக்கு. ஒத்தப் பொண்ணா பெத்து வெச்சுருக்கோம். நல்லா படிக்க வெச்சு ஆயிரக்கணக்கில சம்பளம் வாங்கறா. அவளுக்குப் பிடிச்சா மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் வேண்டாமா... நாங்களும் பார்க்காத இடம் இல்லை. ஒண்ணு எங்களுக்குப் பிடிச்சா ஜாதகம் சரியில்லலை. ஜாதகம் சரியா இருந்தா மாப்பிள்ளைக்கு சொத்து சுகம் இல்லை. நாளைக்கு பொண்ணு கஷ்டப்படக் கூடாதுன்னு பாக்கிறோம். இதெல்லாம் எல்லோர்கிட்டயும் சொல்லிகிட்டா இருக்க முடியும்?”
தோழியின் புலம்பலில் நியாயம் இருந்தது போல் ஒரு பக்கம் தோன்றினாலும் மறுபக்கம் மகளுக்கு 28 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படியே தேடிக் கொண்டிருப்பார்கள் எனும் கவலையும் எழுந்தது. இப்படியே வரும் இடங்களை எல்லாம் காரணங்கள் சொல்லித் தட்டிக் கழித்தால் மகளின் திருமண வாழ்வின் மகிழ்ச்சிகளும் கரைந்துதானே போகும். காலம் கடந்தால் எதுவுமே இனிக்காதே. பருவம் கடந்து செய்யும் திருமணமும் அப்படித்தானே?
தோழியின் மகள் மட்டுமல்ல. நிறைய இளைஞர்களும் தகுந்த பெண் கிடைக்காமல் காத்துக்கொண்டுள்ளனர். அந்தக்காலத்தில் இந்த நிலை இல்லையே? தற்போது தாமதமாகும் திருமணங்களுக்கு காரணம் என்ன? ஆண்களுக்கு சமமாக இல்லையில்லை ஆண்களைவிட மேலாக படித்து சம்பாதிக்கும் பெண்களா? சமீபமாக அதிக அளவில் பேசப்படும் அல்லது நம்பப்படும் கிரக தோஷங்களா? அந்தஸ்து பேதங்களா? ஜாதி மோகமா? இப்படி நிறைய காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கடந்த 20 வருடங்களாக மனங்களை இணைக்கும் திருமணங்களை அமைத்துத் தரும் மகத்தான சேவையை செய்துவரும் சேலத்தைச் சேர்ந்த தில்லைக்கரசி தியாகாஜன் இதுகுறித்து என்ன சொல்கிறார்..?
முதல் காரணம் ஜாதகம். ஜாதகப் பொருத்தம் பார்ப்பவர்கள் தேர்ந்த நிபுணர் ஒருவரிடம் மட்டும் பார்க்க வேண்டும். அவர் சொன்னதில் திருப்தியின்றி மீண்டும் மீண்டும் ஜாதகத்தை பார்ப்பது தவறு. நம்பிக்கை முக்கியம். அந்தக் காலத்தில் சொந்தங்களில் மனப்பொருத்தம் மட்டுமே பார்த்து நடந்த திருமணங்கள் அதிகம்.
சமீபமாக செவ்வாய் தோஷம், ராகு தோஷம் என்ற காரணத்தினால் மனப்பொருத்தம் மற்றப் பொருத்தங்கள் இருந்தும் ஜாதக பொருத்தம் தடையாகிறது. தோஷம் பரிகாரங்கள் எல்லாமே நம் மனம் சம்பந்தப்பட்டதே என்பதை இரு வீட்டாரும் உணர வேண்டும்.
இதில் இன்னொன்றும் சொல்ல வேண்டும். சில சந்தர்ப்பங்களில், ஜாதகம் முன்ன பின்ன இருந்தாலும், வசதியோ பெண்ணின் அழகோ கூடுதலாக இருக்கும்போது அது, அந்தத் திருமணத்தை நடத்தச் செய்கிறது. இது மட்டும் எப்படி?
இரண்டாவது சொந்த வீடு, சொத்து வேண்டும் என்ற நிர்பந்தம். சமீபத்தில் வந்த பெருந்தோற்று சொத்துகள் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை உணர்த்தி சென்றுள்ளது. பெண் மாப்பிள்ளை இருவரும் நன்கு படித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் காலம் இது. சொத்துகளை மையப்படுத்தி வரன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மூன்றாவது, பெண்ணின் வருமானத்தை விட பையனின் சம்பளம் அதிகம் இருக்க வேண்டும் எனும் பெற்றோரின் மனப்பான்மை. இந்தக் காலத்தில் ஒவ்வொரு படிப்பிற்கும் ஏற்ற வேலை என்பதும் அதற்குத் தகுந்த சம்பளம் என்பதும் அனைவருக்கும் மிகச்சரியாக அமைவதில்லை. இருவரில் யார் அதிகம் சம்பாதித்தால் என்ன? அது அவர்களின் வாழ்விற்குத்தானே?
நான்காவது வயது. இன்று பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சம வயது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் பத்து வயது வித்தியாசத்திலும் திருமணம் நடந்தது. ஏனெனில் வீடே கதி என்று இருக்கும் பெண்ணை அனுசரித்து போவார்கள் என்ற காரணம். ஆனால் இன்று அப்படியல்ல. பெண்ணுக்கு சகல விதத்திலும் சுதந்திரம் உண்டு. ஆனாலும் இரண்டு மூன்று வயதுகள் பெண்ணை விட ஆண் அதிகம் இருப்பதே சரியான திருமணவாழ்வின் அஸ்திவாரம். இதை புரிந்துகொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக, முதலில் வரும் சம்பந்தங்களில் சிறு குறைகள் இருந்தாலும் மீண்டும் பரிசீலிக்க வேண்டும். போனால் வராதது காலங்களும் வரன்களும்தான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்
முடிவாக, பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பதைத் தவிர்த்தாலே திருமணங்கள் தாமதமாகாது என்பது என் கருத்து.”
தில்லைக்கரசியின் அனுபவத்தில் வந்த இந்த ஆலோசனைகள் வரன் தேடும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் . திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்றாலும் தகுந்த பருவத்தில் நிகழவேண்டியதன் அவசியத்தைப் புரிந்து, விட்டுக்கொடுத்து தங்கள் பிள்ளைகளின் மணவாழ்வை கொண்டாடவேண்டும் இன்றைய பெற்றோர்.