பெண்மையின் கம்பீரம்!

உலக புடவைகள் தினம் டிசம்பர் - 21
பெண்மையின் கம்பீரம்!

மிக அழகான உடையும் நம் நாட்டிற்கே உரித்தானதுமான புடவைகளின் சர்வ தேச தினம் இன்று. நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் உடையல்லவா புடவை. புடவைகள், உலகப் பெண்களின் கவனம் கவர்ந்ததால், அவற்றின் அழகையும் மேன்மையையும் போற்றும் விதமாக, டிசம்பர் 21ம் தேதிக்கு, உலக புடவை தினம் என்று சிறப்பு தரப்பு தரப்பட்டுள்ளது. புடவையில் பெண்மையின் கம்பீரம் கூடுகிறதல்லாவா?

இன்று போற்றப்படும் புடவையின் வரலாற்றுப் பயணம், கிறிஸ்து பிறப்புக்கு 5000 ஆண்டுகள் முன்பே இந்தியத் துணைக் கண்டத்தில் தொடங்கி விட்டது என்கிறார்கள்.
கி.மு. 2800  ஆண்டுகளுக்கு முற்பட்ட  சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த பெண்கள் அழகிய ஆடைகளைப்  புடவையைப் போல மேனியில் சுற்றி அலங்கரித்துக் கொண்டனராம்.

அச்சமயத்தில், பருத்தியிலிருந்து துணிகள் நெய்யும் கலை வளர்ந்தது.  இயற்கைப் பொருட்களிலிருந்து,  சிவப்பு, மஞ்சள், இளம் வயலட் வண்ணங்கள் சேர்க்கப்பட்டன.

புத்த, ஜைன மதங்களின் ஆரம்ப காலத்தில், சாடிகா என்ற பெயரில் பெண்களின் உடைகள் குறிப்பிடப்பட்டன. (அதிலிருந்துதான் சாடி, சாரி வந்திருக்க வேண்டும்)
18, 19ம்  நூற்றாண்டுகளில், புடவை உடலைச் சுற்றிய உடையாக இருந்ததே தவிர, அப்போது பெட்டிகோட், பிளவுஸ் அணியும் பழக்கம் வந்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதனால் பெண்கள் வெளியே அதிகம் வராமலே இருந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தான் தற்போதைய புடவை அணியும் முறை பழக்கத்துக்கு வந்ததாக கருதப் படுகிறது. பெண்கள் கூட்டம், போராட்டம் என்று போக வேண்டியிருந்ததால், புடவை போர்த்திய உடலைப்  பாதுகாக்க, பெட்டிகோட், பிளவுஸ் அணிய ஆரம்பித்தார்களாம்.

உலக புடவை தினம் குறித்து…

பாரம்பரியமும் நவீனமும் இணைந்த புடவைகள் குறித்து புகழ் பெற்ற, பிரஷாந்தி சாரீஸ் கடையின் உரிமையாளர்  பிருந்தா ஆனந்த் என்ன சொல்கிறார் கேட்போமா?

தொன்று தொட்டு பல தலைமுறைகளாக  பெண்கள் அணியும் புடவைகள், உலகிலேயே மிகவும் கௌரவமான, பெரும் மரியாதைக்குரிய உடையாக மதிக்கப் படுகிறது.மிகவும் நாகரீகமான, நவீனமான உடையாக புடவைகள் வெகு விரைவில் உலகளவில் பேசப்படும் என்பது உறுதி. காஞ்சிபுரம் பட்டு புடவைகள் எத்தனையோ நூற்றாண்டுகளாக  உலகப் புகழ் பெற்றவை அல்லவா?

பிரஷாந்தியைப் பொறுத்தவரை, எக்ஸ்க்ளூசிவாக இந்தியா முழுவதும் உள்ள திறமையான நெசவாளர் களைக் கொண்டு தனிப்பட்ட டிசைனில் புடவைகளை தயாரிக்கிறோம். காஞ்சிபுரம் நெசவில், டிஜிடல் ப்ரிண்ட், சிக்கன்காரி டிசைன்கள் கொண்ட புடவைகள் இளம், மாடர்ன் மங்கையருக்கு மிகவும் பிடிக்கும்.  காஞ்சிபுரம் பட்டு டிசைனில் பனாரசி பார்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இப்போதெல்லாம்  தென்னிந்திய, வட இந்திய டிசைன்கள் இணைந்த  “ஃப்யூஷன் “ புடவைகள், இளம் பெண்கள் விரும்பி அணியும் புடவைகளாகி விட்டன. வெங்கடகிரி, கத்வால், மைசூர்சில்க்,பனாரசி, உப்படா… எத்தனை புடவை வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. இவை எல்லாமே இந்தியப் பெண்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப்  பிரதிபலிக்கின்றனவே...

இன்னும் காலம் காலமாக பெண்களின் மனம் கவர்ந்த உடையாக புடவைகள் என்றுமே இருக்கும். மேலும் மேலும் புடவைகளுக்கு பெரும் மதிப்பு கூடும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று புடவைப் பெருமை போற்றும் பிருந்தா, மங்கையர் மலர், கல்கி, தீபம் வாசகிகளுக்கு சர்வதேச புடவை தினத்தில் தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com