வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்கு...

அனுபவக் கட்டுரை.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்கு...
Published on

நான் ஒரு கல்லூரி மாணவி. என்னுடன் பள்ளியில் படித்த தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அவள் அம்மாவுக்கு சமையலறையில் உதவிக் கொண்டிருந்தாள். கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்த அவளுடைய அம்மா என் தோழியிடம், "இந்த மாவை அள்ளி எடுக்கணும். ஃப்ரிட்ஜில இட்லி மாவு பாத்திரம் இருக்கு. அதை வெளியே எடு" என்றார். தோழியும் அதை எடுத்துப் பார்த்துவிட்டு, "அம்மா இதில் கொஞ்சம் மாவு இருக்கு. வேற பாத்திரத்தில இதை மாத்திடறேன்" என்று சொல்லிவிட்டு அந்த மாவை வேறு ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றினாள். பின்பு அதை எடுத்துச் சென்று ‘சிங்'க்கில் வைத்துக் கழுவ முயன்றபோது அருகில் வந்து பார்த்த அவள் அம்மா, 'ஏய், என்ன மாவு வழிச்சிருக்க? இன்னும் கொஞ்சம் மாவு இதுல ஒட்டிட்டு இருக்கில்ல...? பாத்திரத்தோட உள்புறமும் அடியிலையும் இருக்கிற மாவை விரலால நல்லா வழிச்சு எடுக்கணும் . இதை வச்சி ஒரு சின்ன சைஸ் இட்லி ஊத்தலாம். இப்படித்தான் பொறுப்பில்லாமல் வேலை செய்வியா? நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகிப் போற வீட்டுல இப்படிப் பண்ணினா என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்கன்னு என்னைத்தான் குத்தம் சொல்லுவாங்க" என்றார் கோபமாக.

" ஸாரிம்மா" என்ற தோழியின் முகம் வாடிற்று. எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அவளுடைய பதினைந்து வயதுத் தம்பி சோபாவில் அமர்ந்து ஸ்நேக்ஸ் சாப்பிட்டபடி ஹாயாக டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். நான் தோழியின் அம்மாவிடம், ‘’ஆன்ட்டி, நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கள்ல?’’ என்றதும் ‘என்னடா சொல்லு?’ என்றார் சிரித்தபடி.

‘’ஆன்ட்டி, வீட்டு  வேலைகளை பெண் குழந்தைகளை மட்டுமல்லாமல் ஆண் குழந்தைகளுக்கும் சேர்த்து பழக்குவதுதானே நியாயம்? 

ஸ்ரேயா (என் தோழி)  உங்களுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா. ஆனா தம்பி ஜாலியா டி.வி பார்த்துட்டு இருக்கான். அவனையும் கூப்பிட்டு வேலை செய்ய சொல்லுங்க.  அப்புறம் ஏன் எல்லா அம்மாக்களும் பெண் பிள்ளைகளை கல்யாணத்துக்கு தயாராகிற மாதிரியே வளர்க்கிறீங்க?  இப்போ, இந்த மாவு விஷயத்தையே எடுத்துக்கோங்க. நீங்க சொன்னது போல சொல்லாமல், ‘’இந்த மாவு அரைக்கிறதுக்கு நான் இரண்டு மணிநேரம் கஷ்டப்படனும். கொஞ்சம் மாவுன்னாலும் அதை வீணாக்கலாமா? அதுவும் என் உழைப்புதானே? அதேபோல இட்லிக்கு உபயோகிக்கிற அரிசி பருப்பை விளைவிக்கிற விவசாயி அரும்பாடு பட்டுத்தான் அதை விளைவிக்கிறார். அதனால எந்த உணவுப் பொருளையும் வீணாக்கக் கூடாது’’ அப்படின்னு சொல்லிக் கொடுத்தீங்கன்னா அது எங்க மனசுல காலத்துக்கும் நிக்கும். மறக்கவே மாட்டோம். அத விட்டுட்டு உணவுப் பொருளை வீணாக்கினால் கணவன் வீட்டில் திட்டுவாங்க அப்படின்னு சொல்லிக் கொடுத்தீங்கன்னா எங்களுக்கு வேலை செய்யவும் பிடிக்காது. பொறுப்பும் வராது.

அதே போல கட்டாயமா ஆண் பிள்ளைகளுக்கும் வீட்டு வேலைகளை செய்ய சின்ன வயசுலேர்ந்தே பழகணும். நிறைய வீட்டில பசங்க சாப்பிட்ட தட்டைக் கூட கிச்சன் சிங்கில போடுறதில்லை. ஸ்கூலுக்கு கொண்டு போற டிபன் பாக்ஸை கூட லஞ்ச் பேகிலர்ந்து அம்மாதான் எடுத்துப்போடணும். அப்படியில்லாம அவனையே தான் சாப்பிட்ட தட்டு, டிபன் பாக்சைக் கழுவ சொல்லணும். சின்னவயசுலர்ந்தே வீட்டுவேலைகள் செய்யப் பழக்கினால்தான், ஒரு பெண்ணுடைய (தன் அம்மாவின்) கஷ்டங்கள்  அவனுக்குத் தெரியவரும். நாளைக்கு அவன் ஒரு குடும்பத் தலைவன் ஆகறப்போ தன்னுடைய மனைவிக்கு அவன் வீட்டு வேலைகள்ல உதவி செய்வான். ஆபீஸ் போயி ரெண்டு பேரும் சம்பாதிக்கிற மாதிரி வீட்டு வேலைகளை ஆணும் பெண்ணும் சரிசமமா பகிர்ந்து கொள்ளணும் அப்படிங்கற அந்த உணர்வை சின்ன வயசுல இருந்து ஆண் பிள்ளைகள் மனசுல பதிய வைங்க’’ என்றேன். என்னுடைய கருத்தை ஆன்ட்டி ஏற்றுக் கொண்டார். இனி அதே போல் செய்வதாகவும்கூறிய போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ன் சித்தி என் இரண்டு தம்பிகளையும் மிகவும் பொறுப்பாக வளர்க்கிறார். பள்ளியில் படிக்கும் இருவருமே தன் அம்மாவிற்கு தினமும் சமையல், வீட்டு வேலைகள் என உதவுவர். அதே போல கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரியும் என் அம்மாவின் தோழிக்கு, கல்லூரியில் படிக்கும் அவருடைய இரு மகன்களும் உதவுவர். பாத்திரம் கழுவுவது, காய் நறுக்குவது, வீடு கூட்டித் துடைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்வர். நானும் என் தங்கையும் அம்மாவிற்கு சிறு வயது முதற்கொண்டே வீட்டுவேலைகளில் உதவுகிறோம். நீங்களும் உங்க பிள்ளைங்களை இப்பவே சின்ன சின்ன வேலைகளை செய்யச்சொல்லி பழகுங்க. என்ன நான் சொல்றது சரிதானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com