
எவ்வளவுதான் வாழ்க்கையில் சோதனைகளையும் சாதனைகளையும் சந்தித்தாலும் ஏதோவொரு தருணத்தில் ‘என்னடா வாழ்க்கை இது’ என்று தோன்றுவது இயற்கையே. மனிதப்பிறவியைக் கடக்க உதவும் வழிமுறைகளை அல்லது நெறிகளை மகாபாரதப் போரில் அர்ஜுனன் எனும் மனித வீரனுக்கு சொல்வதுபோல் கிருஷ்ணன் மனிதகுலத்துக்கு சொன்ன ஆலோசனைகள் தான் நாம் கொண்டாடும் பகவத்கீதை. அதிலிருந்து சில அற்புத வழிகள் மட்டும் இங்கு:
* எந்தப் பதவியையும் மகிழ்ச்சியையும் தூக்கி எறிய கூடியவன், இது என்னுடையது என்று எதையும் சொல்லிக் கொள்ளாதவன், நான் எனும் ஆணவம் இல்லாதவன் எவனோ அவனையே அமைதி சரணம் அடைகிறது.
* எவன் ஒருவன் லாப நோக்கம் இல்லாமல் செய்ய வேண்டிய காரியங்களை ஒழுங்காக செய்கிறானோ அவனே கர்மயோகி, ஞான யோகி.
* உணவுக்காக நெருப்பை எரிக்காததாலும் காரியங்களை துறந்துவிட்டதாலும் ஒருவன் ஞானியாக மாட்டான்.
* உன் கடமை தொழில் செய்வது. அதன் லாப, நஷ்டங்கள் உன்னை சேர்ந்தவை அல்ல. என்ன வரப் போகிறது என்று நினைக்காதே. அதற்காக தொழில் செய்யாமலும் இராதே.
* உண்மை பேரறிஞர்கள் தங்கள் செய்கைகளுக்கு கிடைக்கும் லாபத்தை துறந்து பிறப்போடு பூட்டப்பட்ட விலங்குகளை நீக்கி ஆனந்தம் என்ற பதவி அடைகிறார்கள்.
* மோகம் என்பது ஒரு வகை குழப்பம். உனது அறிவு அதை கடந்து சென்று விடுமானால் அப்போது நீ கேட்டது,
கேட்கப் போவது இரண்டிலும் உனக்கு வேதனை வராது.
* மனிதன் ஒன்றை உணர்வுபூர்வமாக நினைக்கும்பொழுது அதில் ஒருவகை பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் ஆசை உண்டாகிறது.
* போவதை கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் பயந்து பயந்து நடுங்காமல் கோபத்திலே குதிக்காமல் இருக்கிறானே அந்த மனிதன்தான் உறுதியான அறிவு வாய்ந்தவன்.
* கோபத்தால் மயக்கம் வருகிறது. நினைவு தடுமாறுவதால் அறிவு கெட்டுப் போகிறது. அறிவு கெடுவதால் மனிதன் அழிந்து போகிறான்.
* விருப்பு, வெறுப்பு இல்லாமல் புலன்களை மனதால் அடக்கி வைத்தபடி தனக்குத்தானே விதி வகுத்துக்கொண்டு நடக்கும் மனிதன் ஆறுதல் அடைகிறான்.
* அமைதி வந்துவிட்டால் ஒரு மனிதனுக்கு எல்லா துன்பங்களும் ஓடி விடுகின்றன. மனம் அமைதி அடைந்ததும் அவனுடைய அறிவும் ஒருமுகமாகி விடுகிறது.
* ஐம்புலன்களும் அலைந்து திரியும்போது ஒருவருடைய மனமும் அப்படி ஆகுமானால் அந்த மனம் எனும் காற்று அறிவென்னும் தோணியை வாழ்க்கை என்னும் கடலில் மூழ்க வைக்கிறது.