வெற்றிக்கு வழிகாட்டும் 12 படிகள்!

வெற்றிக்கு வழிகாட்டும் 12 படிகள்!
  1. ஒருவனுக்குப் பணமும் பதவியும் கல்வியும் திறமையும் இருக்கலாம். ஆனால் அவன் தன்னடக்கம் இல்லாமல் வாழ்ந்தால் இவை யாவும் சோபிக்காமல் போய்விடுகின்றன. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முதற்படி. அடக்கமாக இருக்கப் பழகிக் கொள்வதுதான்.

  2. உறுதியற்ற தன்மை உங்கள் பண்பைக் கெடுக்கிறது. எனவே, உறுதியாகவும் மனோதிடத்துடனும் சிந்திக்கவும் செயற்படவும் பழகுங்கள். வாழ்க்கையின் வெற்றிக்கு இதுவே இரண்டாவது படி

  3. இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாதீர்கள் தள்ளிப் போடுவதும் தாமதிப்பதும் காரியத்தை முடிக்க உதவுவதில்லை. 'நாளைக்கு செய்வேன்' என்றெல்லாம் சொல்லுபவன் எதையுமே என்றைக்குமே செய்யமாட்டான். தாமதமின்றி உடனே முடிவெடுங்கள். இதுவே மூன்றாவது படி

  4. பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதும் ஏராளமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதும் பேராசையாகும். இவை மன அமைதியைக் குலைக்கிறது. பேராசையே பாவம் செய்யத் தூண்டுகிறது. ஆகவே. உங்களுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துங்கள் . மன நிறைவுடன் அமைதியாக இருங்கள். இதுவே நான்காவது படி

  5. உங்களை நம்புங்கள். கடவுள் உங்களுக்கு அருளியுள்ள திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள். அஞ்சாமல் துணிந்து செயல்படப் பழகிக் கொள்ளுங்கள். இதுவே ஐந்தாம் படி.

  6. உங்களுக்கு தைரியமும் சாமர்த்தியமும் இருந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும் தெளிவும் சக்திக்கு இரண்டு கால்கள். அதுவே வெற்றியின் முனையைக் கூராக்கி விடுகிறது. மனக் குழப்பமின்றி தன்னம்பிக்கையுடன் செயற்படுங்கள். இதுவே ஆறாவது படி.

  7. பொறாமையும் வெறுப்புமே ஒருவனைத் தீய வழிக்கு அழைத்துச் செல்கின்றன. தியாக உணர்வு வரும்போது இந்த இரண்டுமே மறைந்து போய் விடுகின்றன. எனவே, வீட்டிலும் வெளியிலும் குடும்பத்துக்காகவும் நாட்டுக்காகவும் தொண்டுள்ளம் கொண்டு வாழப் பழகுங்கள். இதுவே ஏழாம் படி.

  8. மிகச் சிறந்த பண்பு சகிப்புத் தன்மைதான். நம்மை விட உயர்ந்துவிட்டால் அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இன்று மக்களிடையே உள்ள கொந்தளிப்பு, கலவரம், கிளர்ச்சி, எல்லாவற்றுக்கும் இந்த உணர்ச்சியே அடிப்படை. எல்லோரிடமும் அன்பு காட்டினால் சகிப்புத் தன்மை இயல்பாக வந்துவிடும். இதுவே எட்டாவது படி.

  9. சோர்வு, சோம்பல், அயர்ந்திருத்தல் இவை பின் தங்கிய உணர்ச்சிகளின் அடையாளம். சுறுசுறுப்பு, செயல் வேகம், அகமலர்ச்சி ஆகியவை முன்னேறும் உணர்ச்சிகளின் அடையாளம். இவற்றை மேற்கொண்டால் வெற்றிக்கு இது ஒன்பதாவது படி.

  10. சந்தேகம் நல்லுறவையும் அமைதியையும் கெடுத்து விடும். பிறரை நம்புங்கள். நம்பிக்கையில்தான் உலகம் இயங்குகிறது. அது கெட்டவனையும் நல்லவனாக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், பிறரிடம் நம்பிக்கை வைத்து சந்தேகம் இன்றிப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இதுவே பத்தாவது படி.

  11. ஆசையும் கோபமும் சேர்ந்தே மனிதனைக் கெடுக்கிறது. அநியாயம், குரூரம், பதட்டம், பொறாமை, பிறர் பொருள் மீது ஆசை, அபகரித்தல், கொடிய வார்த்தை கூறுதல், கொடியவனாக இருத்தல் ஆகிய எட்டு தீய பண்புகளும் கோபத்தின் அடிப்படையில்தான் உண்டாகின்றன. கோபம் மற்ற நல்ல பண்புகளை அழிக்கும். நம்முடைய கண்களை மறைக்கும். கோபத்தைக் கைவிட்டு, சாந்தமுடன் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றிக்கு இது பதினோராவது படி.

  12. தீய எண்ணங்களை மனத்திலிருந்து அகற்றுவது மிக முக்கியம். தகாத உறவும் சூழ்நிலையும் இந்த நிலையை மேலும் தூண்டி விடுகின்றன. எனவே, நல்லவைகளையே நினைக்கப் பழகுங்கள். தீய எண்ணங்கள் நம்முடைய உள்ள வலிமையையும் உடற் பொலிவையும் கெடுக்கக் கூடியவை. அவற்றைத் தவிர்த்து வாழ்வது வெற்றிக்குரிய பன்னிரண்டாம் ஆகும்.

    இந்தப் 12 படிகளையும் உபயோகித்து மேலே ஏறி வந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

(சுவாமி சிவானந்தர் அருளியதிலிருந்து தொகுப்பு)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com