
ஒரு செயலை செய்வதற்கான மோட்டிவேஷன் என்பது தற்போதைய காலத்தில் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை விரும்பி செய்வதற்கான உந்துதல் அல்லது காரணம் மிகவும் முக்கியமானதாகும். இந்தப் பதிவில் அத்தகைய உந்துதலைக் குறைக்கும் நான்கு விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
போலி டோபமைன்: டோபமைன் என்பது நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது வெளிவரும் ஹார்மோன். அது நம்முடைய மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும். ஆனால் இந்த ஹார்மோன் கிளர்ச்சியை நாம் உண்மையாகவே பெறாமல், போலியாக பெற முயல்வதாலே தற்போதைய இளைய சமுதாயம் அழிகிறது. போதைப் பொருட்களை பயன்படுத்துவது, சூதாட்டம், ஆபாச படங்கள் பார்ப்பது போன்றவை போலி டோப்பமைன் கிளர்ச்சியை உண்டாக்கி இளைஞர்களை அடிமைப்படுத்துகிறது. இது அவர்களின் மோட்டிவேஷனை முற்றிலுமாகத் தடுத்து விடுகிறது.
மோட்டிவேஷனுக்காக காத்திருப்பது: மோட்டிவேஷன் என்பது வெறும் உணர்வு தானே தவிர, அது இருந்தால்தான் நாம் எதுவுமே செய்ய முடியும் என்பதல்ல. நாம் செய்யும் செயல்களிலிருந்தே அது கிடைக்குமே தவிர, மோட்டிவேஷன் இருந்தால் தான் நாம் ஒரு செயலில் ஈடுபட முடியும் என நினைப்பது தவறாகும். பலர் தங்களுக்குள் ஒரு செயலை செய்வதற்கு மோட்டிவேஷன் இல்லை எனப் பொய்யாக நினைத்துக்கொண்டு அப்படியே காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது எனக்கு சரிப்பட்டு வராது: இது பெரும்பாலானவர்களின் மோட்டிவேஷனை சுக்குநூறாக உடைக்கும் விஷயங்களில் ஒன்று. அதாவது ஒரு விஷயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இது எனக்கு சரிப்பட்டுவராது என நினைப்பது. நம்மில் பெரும்பாலானவர்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றை மட்டுமே தேடிச்செல்வதில் கவனம் செலுத்துகிறோம். இதனால் நமது வாழ்க்கையை சிறப்பாக மாற்றுபவனவற்றையும் நாம் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியை கொடுக்கவில்லை எனில், இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என நினைத்து ஒதுக்கி விடுகிறோம். இத்தகைய எண்ணம் உங்களை எதுவுமே செய்யவிடாது. உங்களை மகிழ்ச்சி படுத்தும் விஷயங்களை நோக்கிதான் நீங்கள் செல்ல வேண்டும் என எண்ணுவதை நிறுத்துங்கள்.
விருப்பமின்றி செய்வது: நாம் செய்ய விரும்பாததை செய்யும்போதும் நம்முடைய மோட்டிவேஷன் குறைந்து விடுகிறது. எனவே நீங்கள் எதை செய்யப் போகிறீர்கள் என்றாலும் அதில் ஒரு விருப்பத்தையும், பற்றையும் ஏற்படுத்திக்கொண்டு, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் விருப்பமின்றி செய்யும் எதுவாக இருந்தாலும் அது தோல்வியிலேயே முடியும். அதிலிருந்து வரும் முழு பலன்களை நீங்கள் பெற முடியாது. எனவே எதையும் நாம் விருப்பத்துடன் செய்வது நல்லது.