அழகான குறுஞ்செய்தி... அர்த்தங்கள் ஆயிரம்!
இன்று அதிகாலை எழுந்தவுடன் அலைபேசியில் வந்து ஒரு குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன்ஒரு பதிவு போட மனம் எண்ணியதன் விளைவு..
'காதலென்பது...
அவரவரை
அவரவர்
இயல்போடு நேசித்தல்'.
காதல்... என்று இங்கு நான் குறிப்பிடுவது, சக உயிர்களிடத்தில் நாம் காட்டுகிற நேசத்தை அன்பு,பிரியம்,பாசம் நட்பு... என்று எந்தபெயர் வைத்தும் அழைக்கலாம்.
வாழ்க்கையில் எல்லாம் முழுசாகத் தெரிந்தவர்கள் யாருமே கிடையாது. அடுத்தவர்களை அவர்களுடைய நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்குத் தெரியாத ஒன்று அடுத்தவருக்குத் தெரிந்திருக்கிறது என்றால் அதைக் கொண்டாடவேண்டும்.
என்னைச் சுற்றியுள்ள உறவு/மற்றும் நட்பு களிடம் அவரவரின் இயல்புக்கு ஏற்ப வளைந்து கொடுத்து போய்விடுவேன்.அதுதான் ஆரோக்கியமான/மகிழ்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.மேலும்அப்போதுதான்
உறவுகளிலும் விரிசல் விழாது என்பது என் எண்ணம்.
என்னுடன் உறவு/நட்பு கொண்டுள்ள மற்றவர்கள் சொல்வதை முதலில் ஏற்றுக்கொள்வேன். பிறகு அவர்கள் மனம் புண்படாத பட்சத்தில் தவறை எடுத்துரைப்பேன். உதாரணத்திற்கு...

என் நெருங்கிய உறவு பெண்மணியிடம் புடவை/நகை பற்றி பேசினால் சந்தோஷமாகிவிடுவார்.
என் தோழி ஒருவர் இயக்குநர் பாலசந்தரைப் பற்றி பேசினால் நேரம் போவதே தெரியாமல் பேசுவார். மற்றொரு தோழியோ, ஆன்மீகம் பற்றிய செய்திகளை விரல் நுனியில் வைத்து இருப்பார்.
இன்னொரு தோழரோ பங்கு சந்தையைப் பற்றி எந்த கேள்வி கேட்டாலும்' டக்'கென்று சொல்லும் திறன் படைத்தவர். சமுதாயத்தின் மேலே இருக்கும் கோபதாபங்களை பேசினால் மணிக்கணக்கில் பேசுவார் ஒரு தோழி.. இப்படி நம்மை சுற்றி பலரும்... பலவிதமான திறமைகள் கொண்டவர்கள்.
அவர்களிடம் அவர்களுக்கு பிடித்த விஷயத்தைப் பற்றி பேசும் போது... காதல் அழகாய் துளிர்த்து வளர ஆரம்பிக்கும்.

பூ விற்கும் பெண்மணியில் ஆரம்பித்து.... நாத்தனார்/ஓரகத்தி... பக்கத்து வீட்டு பெண்மணி...இப்படி பலரிடமும் அவரவரின் இயல்புக்கு ஏற்ப பழகுவதால் அனைவருக்கும் நெருக்கமாகி விடுவோம்.
இப்படி செய்து வந்தால் எந்த உறவும் நம்மை விட்டு விலகிப் போகாது. அதேபோல் ஏற்படும் உறவுகள் அனைத்துமே அழகான உறவுகளாக மட்டுமே அமையும் என்பது நான் கண்ட உண்மை.
இன்றைய வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமுள்ள சூழலில்… ஒரு வெற்றியைச் சொல்லி மகிழ, தோல்வியைச் சொல்லி ஆறுதல் தேட மற்றொரு சக இதயம் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அது மற்றவர்களைநேசித்தால் மட்டுமே கிடைக்கும்.
எந்த விதமான முகமூடிகளும் இல்லாமல் நம் அடிப்படையான குணம் என்னவோ அதன்படி உண்மையாக, நேர்மையாக எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் இருந்தால், அனைவரையும் சுலபமாக நேசிக்க முடியும்.
நேசிப்புங்கிறது கைக்கும் கண்ணுக்கும் உள்ள உறவு போல இருக்கணும். கையில் அடிபட்டா கண்கள் அழும். கண்கள் அழுதால் கைகள் துடைத்து விடும்.
'காதலென்பது...
அவரவரை
அவரவர்
இயல்போடு நேசித்தல்'.
காலையில இந்த குறுஞ்செய்தி வந்தாலும் வந்தது... மனசுக்குள்ள ரங்க ராட்டினம் சுற்றியது போல் ஏதேதோ எண்ணங்கள். முழுவதும் சொல்லவில்லை என்றாலும் என் மனதில் இருந்ததை சொல்லி விட்டேன் உங்களிடம்!
என்றென்றும் அன்புடன்,
ஆதிரை வேணுகோபால்.