மனதில் அவசியம் எரிய வேண்டிய பச்சை விளக்கு!

மனதில் அவசியம் எரிய வேண்டிய பச்சை விளக்கு!

க்கத்து வீட்டுக்காரர் ஏப்போதும் சந்தோஷமாக காணப்படுகிறார். நமக்கு மட்டும் ஏன் சலிப்பு, விரக்தி ஏற்படுகிறது? டாக்டரிடம் சென்று காண்பிக்கையில், உடல் கோளாறு ஒன்றுமில்லை என்று கூறி, பேருக்கு சில வைட்டமின் மாத்திரையை நமது திருப்திக்காகக் கொடுப்பார். இது உள்ளக் கோளாறு ஆகும்.

பிறப்பென்பது ஒரு சகாப்தம். அதிலும் சந்தோஷத்தை அனுபவிக்கவென்று ஏற்பட்டிருக்கும் பிறப்பு எதுவெனில் அது மனித பிறப்புதான். சந்தோஷத்தைக் கெடுக்கவென சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதைப் பிரச்னையாக கருதாமல், சவாலாக எண்ணி சமாளிப்பது, மனோதைரியத்தை அதிகரித்து சந்தோஷத்தை அளிக்கும்.

முயற்சியை சரியான பாதையில் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். வெற்றியை அடைய சந்தோஷம் எனும் பச்சை விளக்கு மனதில் எரிய வேண்டும்.

ஒரே மாதிரியான வேலையை செய்கையில் சந்தோஷம் குறையத்தான் செய்யும். அச்சமயம் செய்கின்ற வேலையைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, சற்று நேரம் சந்தோஷம் தரும் செயல்களில் ஈடுபடுதல் தேவை.

பிற உயிர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்வது, மனதார யாருக்கும் தீங்கிழைக்காமல் இருப்பது, சினம் தணிந்து நேர்மையாக நடப்பது, நல்லவைகளையே நினைப்பது போன்ற பல விஷயங்கள் சந்தோஷத்தை அளிக்கக்கூடியவைகள்.

சந்தோஷம் இருந்தால் ஊக்கம் அதிகரிக்கும். சிறிய வேலை, பெரிய வேலையென்று நினைக்காமல், சந்தோஷமாக அதில் முழு மனதுடன் ஈடுபடுகையில், சந்தோஷம் அதிகரிக்கும்.

‘மனித மனம் குரங்கு’ என்ற பழமொழி மாதிரி சில செயல்கள் மனதை அலை பாயச் செய்தாலும், அதை பிடித்து நிறுத்த, கடவுள் நமக்கு கொடுத்த ஆறறிவைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

“அறியாப் பருவத்தில், விளையாடுவதில் சந்தோஷம்!

அறிந்தும் அறியா பருவத்தில், சைட் அடிப்பதில் சந்தோஷம்!

அறிவு வளர்ந்த பருவத்தில், சம்பாதிப்பதில் சந்தோஷம்!

அறிவாற்றல் அதிகமாகையில், ஆன்மிக ஈடுபாடலில் சந்தோஷம்!

ஆனந்தமாக வாழ வைக்கும் சந்தோஷம்!

ஆரோக்கியத்தை அளிக்கும் சந்தோஷம்!

மன்னிப்பை ஏற்பதும் சந்தோஷம்!

மன்னிப்பை அளிப்பதுவும் சந்தோஷம்!

‘சிலர் பேசினால் சந்தோஷம்!

சிலர் பேசாமலிருந்தாலே சந்தோஷம்!’ எனக் கூறுவதுண்டு. சொல்லால், செயலால் நம்மால் முடிந்தவரை சந்தோஷமாக பிறரிடம் செயல்பட்டால், நாம் எல்லோராலும் விரும்பப்படுவோம். நமது உடலும் நோயுற்று, மனமும் கவலையற்று இருக்கும்.

“இவங்க வந்தாலே இந்த இடம் சந்தோஷமாக இருக்கு” என்று சொல்லும் வகையில் அனைவராலும் செயல்பட முடியாவிட்டாலும், சென்ற இடத்தில் பிறரின் சந்தோஷத்தைக் குலைக்காமல் செயல்படுவதும்கூட ஒரு வகை சந்தோஷத்தைத் தரும்.

என்ன சரிதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com