
‘பணம் தான் மனித குலத்தின் எல்லா தீமைகளுக்கும் காரணம்’ என்ற தவறான நம்பிக்கையே ஒரு மனிதனை ஏழையாக வைத்திருக்கிறது.மேலும் ஏழ்மை என்பது அறிவு, கருணை மற்றும் நம்பிக்கையின் அடையாளம் என்றும் சிலர் கருதுகிறார்கள். ‘How to attract money என்ற நூலில் ஜோசப் மர்ஃபி நீங்கள் பணக்காரராக விரும்பினால் இந்த மாதிரி தேவையில்லாத தத்துவங்களை கொள்கைகளை உதறி எறிய வேண்டும் என்கிறார். ஒரு மனிதன் தான் மகிழ்ச்சியாகவும் செழுமையாகவும் இருப்பதற்கு தகுதியானவன். தனக்குத் தேவையான எல்லாவற்றையும் பணத்தால் வாங்க முடியும் என்று நம்ப வேண்டும், உணர வேண்டும் என்கிறார். பணத்தை ஈர்க்க அவர் சொல்லும் உத்திகள் இதோ;
1. முதலில் பணம் வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் கொழுந்து விட்டு எரிய வேண்டும்; அதன் பின் அதற்கான வழிமுறைகள் உங்களுக்கு தென்படும். அந்த ஆசை உங்கள் மனம் முழுதையும் ஆக்கிரமித்த பின் உங்கள் உடல், எண்ணம், உணர்வுகள் அனைத்துமே பணத்தை தேட ஆரம்பித்துவிடும்.
2. எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களையும் வார்த்தைகளையும் உதறி எறியுங்கள்; செல்வந்தனாக வேண்டும் என்ற உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் பிறரிடம் பகிரும் போது, அவர்கள் அதை சரியான கோணத்தில் உணராமல் போகலாம். அவர்கள் உங்கள் கனவைப் பற்றிய எதிர்மறை வார்த்தைகளைச் சொல்லும் போது உங்களுக்கு விரக்தியும் வருத்தமும் ஏற்படும். ஏனென்றால் அவர்கள் பணம் தேடும் முயற்சியில் தோற்றவர்களாக இருப்பார்கள்.
3. எனவே செடியை நீரூற்றி வளர்ப்பது போல, உங்கள் லட்சியத்தை கவனமாக மனதுள் வளர்க்க வேண்டும்; அதற்கு வளமான செழுமையான ‘மைண்ட் செட்’. அது பிரார்த்தனைகள் மூலம் கிடைக்கும். பிரார்த்தனை, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வை மட்டும் ஏற்படுத்துவதில்லை. மனதில் எழுதி வைத்த ஆசைகளையும் லட்சியங்களையும் பூர்த்தி செய்கிறது. பிரார்த்தனையின் போது சொல்லப்படும் நேர்மறை வார்த்தைகள் மூளைக்கு சென்று ஆழப்பதிந்து முத்திரை பதிக்கின்றன. அவை அப்படியே ஆழ் மனதிற்கும் சென்று நினைத்ததை அடையவும் வழி வகுக்கிறது.
4. உங்கள் கனவுகளை மனதார நம்புங்கள்; இந்த வாக்கியத்தை வெறும் ஒற்றை வரியாக எண்ணக்கூடாது. இதையே நாம் மோட்டிவேஷன் என்கிறோம். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் கடினமாக இருந்தாலும் மோட்டிவேஷன் இலட்சியத்தை நோக்கித் தொடர்ந்து செல்லத் தூண்டுகிறது.
5. கனவுகளை காட்சிப்படுத்துங்கள்; உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை மனதிற்குள் நன்றாக எண்ணிக் கொள்ள வேண்டும்.பணக்காரனாக வேண்டும் என்ற உங்களுடைய கனவை உணர்ந்து அதைக் காட்சிப்படுத்தி பார்க்கும்போது உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் செல்கிறீர்கள்.
6. நேர்மறை வார்த்தைகளையும் காட்சிப்படுத்துங்கள்; உங்களுடைய மூளையை நேர்மறை வார்த்தைகளால் நிரப்பும்போது அவை ஆற்றலைத் தந்து, நல்ல எண்ணத்தை உருவாக்கி, லட்சியத்தை ஆழ்மனத்திற்கும் கொண்டு செல்கிறது.
7. விரும்பியது ஏற்கனவே கிடைத்துவிட்டது மாதிரி காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் பணக்காரர் ஆன பின்னால் என்னவெல்லாம் வாங்குவீர்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். சவுகர்யமான வசதியான வீடு, பெரிய கார், நகைகள், போன்றவற்றை ஏற்கனவே வாங்கிவிட்டது போல எண்ணிக்கொள்ளுங்கள். அந்த வீட்டில் வசிப்பது போலவும், காரை ஓட்டிச் செல்வது போலவும் காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள். இவை நல்ல விளைவுகளை தோற்றுவிக்கும். நமது மூளையும் நமது எண்ணங்களை நிஜமாக்க வேலை செய்யும். பயத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் உதைத்து தள்ளிவிட்டு உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும்.
8. உணர்வுகளை சரியாக கையாளத் தெரிந்து கொள்ளுங்கள்;
விரக்தி, எதிர்பார்ப்பு, ஏமாற்றங்கள், விருப்பங்கள் இவற்றை சரியாக கையாளத் தெரிந்து கொள்வதோடு ‘நமக்கான நேரம் வரும்’ என்ற புரிதலும் இருக்க வேண்டும். நாம் பெரும்பாலான நேரங்களில் உணர்வுகளின் அடிப்படையில் செயல்படுகிறோம்.
9. உங்கள் தவறுகளே உங்கள் ஆசிரியர்கள்; இலக்கை நோக்கிய பயணத்தில் சில தவறுகள் நேரலாம். அவை உங்களுக்கு ஆசிரியர்கள் போல செயல்பட்டு, புதிய பாடங்களை கற்றுத்தரும். மேலும் புதிய வாய்ப்பு களையும் வெற்றிகரமான விதிகளையும் கற்றுத் தருகிறது.