
பல சமயங்களில் நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என நினைத்து பலர் கவலைப்படுவார்கள். அத்தகைய நபர்கள் சில விஷயங்களைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி சிந்தித்தே அதிக நேரத்தை நாம் செலவிடுகிறோம். மற்றவரின் கருத்துக்கள் நம்முடைய வாழ்க்கையை பாதிக்கும் விதமாக நாம் சிந்திக்கும் விதத்தையே மாற்றிவிடுகிறோம். ஆனால் இதில் உண்மை என்னவென்றால், மற்றவர்களின் கருத்தைக் காட்டிலும் நம்முடைய சொந்தக் கருத்துகளுக்கும் முடிவுகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என நாம் அதிகமாக சிந்திக்கும்போது, அவர்களின் இடத்தில் இருந்து நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது பல விஷயங்களை நாம் முறையாகக் கையாள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும். நீங்கள் உங்களுடைய எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டு கோணத்தில் சிந்திக்கிறது என அறிந்து, அவற்றை தனித்தனியாகத் தீர்க்க முடிவு செய்ய வேண்டும்.
ஒரு தவறான நினைவிலிருந்து நாம் மீண்டு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை அறிந்து, உங்கள் சொந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுப்படுத்தினால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். எனவே பிறரைப் பற்றி அதிகமாக சிந்தித்து உங்களை நீங்கள் கஷ்டப்படுத்திக் கொள்ளாமல், உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு செயலுக்கான முடிவுகளை எடுக்கும்போது நாம் எப்படி உணர்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த முடிவை எடுக்கலாமா வேண்டாமா என நாம் நிர்ணயம் செய்யலாம். ஆனால் நம்முடைய முடிவுகளுக்கு பிறர் என்ன நினைப்பார்களோ என்ற கருத்து ஓர் காரணமாக இருக்கக்கூடாது.
சில சமயங்களில் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அமைதியாய் இருப்பது சிறந்த முடிவுகளை நாம் எடுக்க உதவும். இப்படி எடுக்கும் முடிவுகள் நம்மைப்பற்றி நாமே ஆச்சரியப்படும் வகையில் உணரச் செய்யலாம். இது நம்மைப் பற்றி நன்றாக உணர உதவும்.
எனவே உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கும் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பியபடி எப்படி வேண்டுமானாலும் வாழலாம். தேவையின்றி பிறரைப்பற்றி சிந்தித்து வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்.