
இன்றைய இணையை உலகில் உலகம் முழுவதிலும் இருந்து பலர் யூடியூப் வாயிலாக கோடிக்கணக்கில் பணம் ஈட்டி வருகிறார்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்ல.
குறிப்பாக பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்களை விட அதிக வருமானத்தை யூட்யூப் பிரபலங்கள் பெறுகிறார்கள் என்றும் சொல்லலாம். அப்படி யூடியூப் மூலமாக கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் ஒருவரைப் பற்றிதான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். அவர்தான் இந்தியாவின் பிரபலமான சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களில் ஒருவரான புவன் பாம். இவருக்கு சொந்தமாக BB Ki Vines என்ற youtube சேனல் உள்ளது இதில் 25 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இது தவிர திரைப்படங்கள், வெப் சீரியஸ்கள் போன்றவற்றில் இவர் நடித்துள்ளார்.
தொடக்க காலத்தில் கஃபேக்களில் பாடகராக தனது பயணத்தைத் தொடங்கிய புவன், ஆரம்பத்தில் அவரது சம்பளம் வெறும் 5000ஆக மட்டுமே இருந்தது. இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு தன்னுடைய யூடியூப் சேனலைத் தொடங்கி, அதில் நகைச்சுவை சம்பந்தமாக காணொளிகள் பதிவிட்டு வந்தார். தனது காணொளியில் வரும் எல்லா கதாபாத்திரத்திற்கும் இவரே நடித்ததால் அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இவருடைய சேனலும் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடையத் தொடங்கியது.
யூட்யூபில் கிடைத்த மிகுந்த ஆதரவால் மிகப்பெரிய உச்சத்தை இவர் அடைந்தார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 122 கோடியாகும். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?. இவருடைய பெரும்பாலான வருமானங்கள் யூட்யூப் மூலமாகவே கிடைத்திருக்கிறது. இவர் உருவாக்கிய 'திந்தோரா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த தொடர், யூடிபில் மட்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து 'தாஸா கபார்' என்ற வெப் சீரிஸில் நடித்த புவனுக்கு, தனது திறமையால் அதிக பார்வையாளர்களை கவர முடியும் என்ற நம்பிக்கையை இதுதான் தனக்குக் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனால் தற்போது பார்வையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அதிக மாற்றங்களை செய்துள்ளார் இவர். தொடக்கத்தில் இவருடைய காணொளிகள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இருக்கும். ஆனால் தற்போது ஷார்ட்ஸ் வீடியோக்களின் வருகைக்குப் பிறகு, 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் வீடியோக்களுக்கே அதிக பார்வையாளர்கள் கிடைக்கிறது. ஆனால் இத்தகைய மக்களின் மனநிலையால் எதிர்காலத்தில் தன்னுடைய பதிவுகளுக்கு எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படப்போகிறது என்பதில் சந்தேகத்தில் இருப்பதாக புவன் கூறுகிறார்.
தன்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய ஏதாவது கதை கிடைத்தால் அல்லது ஒரு படத்திற்கு தன்னால் முடிந்த முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என்று தோன்றினால் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன் எனக் கூறுகிறார். இப்படி முழுக்க முழுக்க தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னுக்கு வந்து சாதித்துக் காட்டியுள்ளார் புவன் பாம்.