Verbal AIKIDO முறை கொண்டு உங்களின் எதிராளியை விவாதத்தில் வீழ்த்துங்கள்…

Verbal AIKIDO Method.
Verbal AIKIDO Method.

பொதுவாக நம்முடைய வார்த்தைகள்தான் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்பார்கள். அதாவது நாம் என்ன நினைக்கிறோமோ என்ன பேசுகிறோம் அதுவாகவே நிஜ வாழ்வில் மாறுகிறோம். எனவே நமது வார்த்தையை திறம்பட பயன்படுத்தினால், நம்மிடம் தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்பவர்களிடம் நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

இருவருக்கு மத்தியில் நடக்கும் விவாதம் என்பது, அவர்களின் தனிப்பட்ட கருத்தின் மீதுள்ள நம்பிக்கை, அல்லது சரியான புரிதலற்ற தன்மையினால் ஏற்படுவது. அதை அறிந்து கொண்டு, நாம் சிறப்பாக வார்த்தைகளைப் பயன்படுத்தினாலே, அவ்வாதத்தில் வெற்றி பெறலாம்.

இதற்கு, முதலில் மனிதர்களின் இருவகையான சிந்தனை அமைப்புகளைப்பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1. முதல் அமைப்பு:- எதைப்பற்றியும் அதிகமாக சிந்திக்காமல், தனக்குத் தோன்றும் போக்கில் முடிவுகளை எடுப்பது.

2. இரண்டாம் அமைப்பு:- எது சரி, எது தவறு என்று வகை பிரித்து, நன்கு அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது.

இதில் பெரும்பாலும் முதல் அமைப்பைச் சார்ந்தே மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதால், அனைத்து விதமான பிரச்சினைகளும் அவனை சூழ்கிறது. தன் வாழ்வில் எது சரி எது தவறு என்று வகை பிரித்தறியும் தன்மை பற்றி மனிதன் சிந்திப்பது கிடையாது.

எனவே இந்த Verbal Aikido முறையில் நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் இரண்டாம் அமைப்பின் மூலம் எடுக்கப் பழகுங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து, சரி தவறு ஆராய்ந்து பேசுங்கள். எங்கே எப்படி சரியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.இதற்கு ஏன் Verbal AIKIDO முறை என்று பெயர் வந்ததென்றால், Aikido என்பது ஒரு ஜப்பானிய தற்காப்பு முறை. நமது எதிராளியை காயப்படுத்தாமல் துன்புறுத்தாமல், அவர் நம்மை தாக்க வரும் திசையை அறிந்து, அவரை விலக்கி மாற்று வழியில் விடுவதே Aikido முறையாகும். இதேபோன்று நமது எதிராளி பயன்படுத்தும் சொற்களை வேறு கோணத்தில் மாற்றி, வெற்றி பெற எண்ணுவதே Verbal AIKIDO.

இதற்கு முதலில் நீங்கள் அமைதியைக் கையாள வேண்டும். அவர் என்ன கூறினாலும் அதை பொறுமையுடன் கிரகித்துக் கொண்டு உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இடையில் இடையில் அவர் பேசுவதற்கு இணங்கி நீங்களும் பேசிக்கொண்டிருந்தால், சரியான தீர்வு நிச்சயம் கிடைக்காது.

இரண்டாவது அவர் சொல்வதை நன்றாக கவனியுங்கள். அவர் அவசர அவசரமாக பேசும்பொழுது நிச்சயம் தவறான வார்த்தைகளைக் கொட்டுவார். அதிலிருந்து மாற்று கேள்வியை அவர் மீது தொடுத்து, அவரை பதில் ஏதும் கூறாத வகையில் நாம் செய்ய முடியும். நன்றாக அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கேளுங்கள்.

இறுதியாக அனைத்தையும் அலசி ஆராய்ந்து, அவரை காயப்படுத்தும் வகையில் பேசாமல், உங்களுக்கான மாற்று கருத்தையோ அல்லது மாற்று வழியையும் அவருக்கு புரியும் வகையில் தெரியப்படுத்த முயற்சி செய்யுங்கள். 

அவர் மீண்டும் மீண்டும் நீங்கள் கூறுவதற்கு எதிர்மாறாக பேசிக்கொண்டிருந்தால், கோபப்படாமல் சரியான கேள்விகளை அவர் மீது தொடுத்து, உங்களுடைய கருத்துக்களை அவர் மனதில் சிறுக சிறுக பதியச் செய்யுங்கள். இதுபோன்ற பொறுமையான செயல்பாடு, உங்களை அந்த விவாதத்தில் வெற்றி பெறச் செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com