தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது. எனவே தொழில்நுட்ப திறன்கள் உங்களிடம் இருக்க வேண்டும் என்று முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, எக்செல் மற்றும் ஜி-சூட் போன்ற மென்பொருள்களைக் கையாளும் திறன், மென்பொருள் அல்லாத துறைகளிலும் பயன்படுகிறது. அதனால் சரியான தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக்கொள்வதில் உங்கள் நேரத்தை முதலீடு செய்தால், நீங்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
நிறுவனங்கள், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றன. அவை அனைத்தையும், ஒருவர் மட்டுமே தீர்த்துவிட முடியாது. எனவே, தங்களுடைய நிறுவனத்தில்/ குழுவில் பணியாற்றும், எல்லா பணியாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.
கற்றல் மற்றும் மேம்பாடு என்பது முடிவில்லாத ஒன்றாகும். வேகமாக மாறிவரும் துறையில், புதிய விஷயங்களையும், சமீபத்திய வழிமுறைகள்/தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வது அவசியம். உதாரணமாக, நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்தால், புதிதாக அறிமுகமாகும் கோடிங் மொழிகளை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் நகர முடியும்.
உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியைக் காண தகவல் தொடர்பு திறன் மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் யோசனையை மக்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க தொடர்பு திறன் அவசியம். ஒரு நல்ல தொடர்பாளராக, எவ்வாறு பேசுவது, கருத்துகளைப் பரிமாறுவது, பிறர் கருத்தை கவனமாகக் கேட்டறிவது என்பது போன்ற தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு வேலைகளைப் பற்றி சிந்திக்காமல், கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தலாம். உங்கள் முன்னுரிமைகளுக்கு ஏற்ப உங்கள் அட்டவணையைத் திட்டமிடுவது உங்களை உந்துதலாகவும், உற்பத்தித் திறனுடனும் உணர வைக்கும்.
நேரம் என்பது பணம் போன்றது. உங்கள் நேரத்தை திறம்பட கையாள முடியாவிட்டால், நீங்கள் உங்களது வருமானத்தை பணயம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் தனது நேரத்தை சிறப்பாக நிர்வகித்தால் மட்டுமே தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்யாமல் வெற்றி பெற முடியும். இது வேலை-வாழ்க்கை சமநிலையை (Work Life Balance) கடைப்பிடிக்க உதவுகிறது.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்த விதமான சிக்கலும் இல்லை என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வேலை கொடுப்பவர்கள் தொழில் ரீதியான திறமைகளுக்கு மட்டும் வேலை கொடுப்பது இல்லை. சில வேறுபட்ட திறமைகளையும் பார்ப்பது உண்டு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தன்னம்பிக்கையுடன் நடை போடுகிறவர்களுக்கு வெற்றி மிக அருகில் தான். முதல் முறையாக ஒருவரை சந்திக்கும் போது நடையின் மூலம் உங்களது நம்பிக்கையை வெளிக்காட்டுங்கள். அடுத்தவரிடம் பேசும் போது பதட்டமில்லாமல் சாதாரணமாக இருந்தாலே அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை கூடும். நீங்கள் வேலைக்கு செல்ல தயார் என்றால் உங்களது தனிப்பட்ட திறமைகள் தான் அதன் திறவுகோல் என்கிறார்கள்.