
விற்பனையில் சாதனை படைத்த புகழ் பெற்ற தன்னம்பிக்கை நூலான ‘’The seven habits of highly effective people’’ புத்தகத்தில் அதன் ஆசிரியர் ஸ்டீபன் கவே, மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்களின் 7 பழக்கங்களை பட்டியலிடுகிறார்.
1. செயல்திறன் மிக்க மனிதர்களாக இருப்பது. ‘என்னால் முடியும், நான் இதைச் செய்வேன்’ என பொறுப்புகளை வலிந்து ஏற்பது ஆற்றல் வாய்ந்த வர்களின் குணம். ‘என்னால் முடியாது, நான் இதைச் செய்ய மாட்டேன்’ என எதிர்வினை ஆற்றும் நபர்களுக்கு நேர் எதிர் குணம் கொண்டவர்கள் இவர்கள்.
2. தம் இலட்சியத்தின் முடிவான வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு செயலில் இறங்க ஆரம்பிப்பது. ஒரு மிகப்பெரிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு அதன் வரைபடம் (ப்ளூ பிரிண்ட்) அடித்தளமாக அமைவது போல, கடைசியில் அடையக்கூடிய வெற்றியை மனதில் கற்பனை செய்து கொண்டு, இலக்கை நோக்கி செயல்பட ஆரம்பித்தல்.
3. முதல் விஷயங்களை முதலில் செய்யவும். ; உடனே செய்து முடிக்க வேண்டிய முக்கியமற்ற வேலைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அடைய வேண்டிய இலக்கை நோக்கி செயல்படுதல். உதாரணமாக, வாட்ஸ்அப் மெசேஜ்க்கு பதில் சொல்வது, நண்பர்களுடன் பார்ட்டி, சினிமாவுக்கு போவது போன்றவற்றை பிறகு பார்க்கலாம். முதலில் நம் இலக்கை நோக்கிய செயல்பாடுகள் அமையட்டும்.
4. ‘நீயும் ஜெயிக்கணும் நானும் ஜெயிக்கணும்’ என்ற கோட்பாட்டை கடைபிடித்தல். ஒருவர் தோற்றால் தான் மற்றவர் வெற்றி பெற முடியும் என்றில்லாமல் இருவருமே சேர்ந்து வெற்றி பெறும் செயல்களை செய்ய வேண்டும். ‘எனக்கு அதிகப் பங்கு, உனக்கு குறைவு’ என்றில்லாமல், ‘உனக்கும் எனக்கும் சமமாக பங்கு பிரித்தால் இருவருக்கும் மகிழ்ச்சி, லாபமும் கூட.
5. நம்மை பிறர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதை விட நாம் பிறரின் உணர்வுகளை சரியாகப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்
நாம் எழுத, படிக்க, பேச பயிற்சி எடுக்கிறோம். ஆனால் பிறர் பேசுவதை கேட்க பயிற்சி எடுத்திருக்கிறோமா? ஒருவர் பேசுவதை முழுமையாக கேட்காமல் நாமே அவரை பற்றி ஒரு அவசர முடிவுக்கு வந்து விடுவோம். அவரைப் புரிந்து கொள்ள அவர் பேசுவதை முழுமையாக குறுக்கிடாமல் கேட்க வேண்டும்.
6. குழுவாக வேலை செய்வது. திறந்த மனதுடன் குழுவாக வேலை செய்யும்போது பழைய பிரச்சினைகளுக்கு கூட புதிய நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
7. ரம்பத்தை கூர் தீட்டுதல்; நீங்கள் தான் உங்களின் மிகப் பெரும் சொத்து. அதை பாதுகாப்பாகவும், மேன்மையாகவும் வைத்துக்கொள்ள ஒருவர் தன்னை சுயமாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தன் உடல், மனம் ஆன்மீக, சமூக, உணர்வு ரீதியாக தன்னை சிறப்பாக சமமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஏழு பழக்கங்களையும் ஒருவர் பின்பற்றினால், நீங்கள் சமூகத்தில் பயனுள்ள, அர்த்தமுள்ள ஆற்றல் மிக்க மனிதர்களாக திகழ்வது உறுதி.