தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி?

தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி?

நிறைய பேருக்கு பெயர், நிறம், தோற்றம் உயரம், வசதி இன்மை, மொழி, நவீன தொலைத் தொடர்பு சாதனங்களை இயக்கக் தெரியாமல் இருப்பது, போன்றவற்றால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவது உண்டு. இந்த தாழ்வு மனப்பான்மையை எப்படி போக்கலாம்? அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்

தாழ்வு மனப்பான்மை இல்லாதவர்கள் உலகத்தில் யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும். எனக்கு நீந்தத் தெரியாது என்று கூறிக்கொண்டு, கரையின் மேல் அமர்ந்திருந்தால் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? தண்ணீரில் குதித்து முயற்சி செய்தால்தானே நீந்த முடியும். அது போல்தான் இதுவும்.

பெயர்:

கிராமத்தில் பெற்றோர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து தவறி மூன்றாவதாக பெண்ணோ ஆணோ பிறந்தால், உடனே அதற்கு மூக்கு குத்தி பிச்சை, குப்பு போன்ற பெயர்களை வைத்துவிடுவார்கள் அது கடவுள் போட்ட பிச்சை. கடவுள் புண்ணியத்தில் பிழைத்தால் போதும் என்பது மட்டும்தான் அப்பொழுது பெற்றோர் களின் நோக்கமாக இருக்கும். மற்றபடி அலங்காரமாக பேர் வைக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தோன்றாது.

இது போன்ற பெயர்களுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மற்றவர்களிடம் பெயரைக் கூற வெட்கப்பட்டுக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் தனித்து இருப்பதைப் பார்க்கலாம். இவர்கள் தன் பெயரை மறந்து கல்வி, கலைகளில் ஆர்வத்தை செலுத்தி தனக்கு எது நன்றாக வருமோ அதைக் கசடறக் கற்று, அந்த தொழிலை வித்தியாசமாக செய்தால் அந்தப் பெயரே அவர்களை புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லும். பிறகு “பெயரில் என்ன இருக்கிறது. ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் மணக்கத்தான் செய்யும்” என்று மற்றவர்கள் புகழ்வதை கேட்கலாம் இதற்கு நாம் செய்ய வேண்டியது ‘நமக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்?’ என்று எண்ணி வேதனைப்படாமல், மாறாக தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, விடாமுயற்சியுடன் செய்யும் தொழிலே தெய்வம் என்று ஒருமுகமாய் தொழிலில் கவனம் செலுத்துவதுதான்.

நிறம்; தோற்றம்

சிவந்த  நிறம் உடையவர்களை பார்க்கும்பொழுது, நாம் அப்படி இல்லையே என்று மாநிறமாக இருப்பவர்கள்கூட தாழ்வு மனப்பான்மை கொள்வது உண்டு. இந்த தாழ்வு மனப்பான்மையில் அமிழ்ந்து கிடக்காமல் கருப்புதான் எனக்கு பிடித்த கலர் போன்ற பாடல்களை தத்துவ பாடல்களாக மனதில் ஏற்றிக்கொள்ளலாம். மேலும் நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் தோற்ற பொலிவு கூடும். தோற்றத்திற்கும் சூழலுக்கு தக்கவாறு ஹேர் கட்டிங், மேக்கப் மற்றும் ட்ரெஸ்ஸிங் என்ற எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினால், நமக்கே நம் மீது ஒரு நம்பிக்கை உருவாகும். மற்றவர்களும் நம்முடன் இயல்பாக பழக ஆரம்பிப்பார்கள்.

மொழி:

மாற்றலில் அல்லது பணி நிமித்தமாக அயல் மாநிலம், அயல்நாடு செல்ல நேரிட்டால், அந்தந்த மாநிலத்தின் மொழி புத்தகங்களை வாங்கி, அந்த எழுத்துக்களை எழுதி பழகுவது நல்லது. குழந்தைகளுக்கு அந்த மொழியை கற்று நாமே பாடம் சொல்லிக்கொடுத்தால், நம் மொழி அறிவும் மேம்படும். குழந்தைகளுக்கும் டியூஷனுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், டிவியில் வரும் செய்திகள், திரைப்படம் பார்ப்பது போன்றவற்றை கவனித்தால் மொழியை கற்றுக்கொள்வது எளிதாகிவிடும். நிறைய செய்தித்தாள்களை படிப்பது, கற்றவற்றை மற்றவர் களுடன் நன்கு விவாதிப்பது, எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவர்களுடன் அவர்களின் வட்டார மொழியில் பேசுவது. அவர்களுடன் நெருங்கி பழகுவது, அவர்களின் பண்டிகைகளை நாமும் நன்கு அறிந்து வைத்துக்கொள்வதுடன் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது என்று இணக்கமாக செயல்பட்டால் தாழ்வு மனப்பான்மை தானே அகன்றுவிடும். நீங்கள் ஒரு நாள் உங்கள் தோழிகளை சந்திக்கவில்லை என்றாலும், அவர்களே உங்களை உரையாட அழைப்பார்கள்!

தொழில்நுட்பம்:

ன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை முழுமையாக அனுபவிக்க தொழில்நுட்ப ரீதியாக பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய விஷயங்களை அவ்வப்பொழுது கற்றுக்கொள்ள வேண்டும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், youtube ஆப் என எல்லாவற்றையும் நன்றாக இயக்க தெரிந்து வைத்திருந்தால் மற்றவர்களுடன் பழகும்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படாது.

திருமணமாகியோ அல்லது வேலை நிமித்தமாகவோ சொந்த ஊர்களில் இருந்து பெரிய பட்டணங்களுக்கு வேலைக்கோ, குடியிருக்கவோ செல்பவர்கள் இதுபோன்ற எளிய நடைமுறைகளை பின்பற்றினால் தன்னம்பிக்கை பெருகும். தாழ்வு மனப்பான்மை தானே அகன்றுவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com