உங்களை மற்றவருடன் ஒப்பிட்டு பார்ப்பதை எப்படி நிறுத்துவது?

உங்களை மற்றவருடன் ஒப்பிட்டு பார்ப்பதை எப்படி நிறுத்துவது?

ம்மை விட ஒருவர் பெரிய வேலையில் இருக்கும்போதும், வசதியாக இருக்கும்போதும், தேர்வில் சக மாணவன் அதிக மதிப்பெண் எடுக்கும்போதும் இந்த ஒப்பிடும் குணம் இயல்பாகவே வந்துவிடும். அது இயற்கையே!

ஆனால் அந்த குணமே அளவுக்கடந்து போகும்போது மன நிம்மதியும் நம் இலக்கிற்கான தேவைகள் தெளிவாக தெரியாமலும் தடுமாறுவோம். அனைத்திற்கும் மேல், நாம் நம்மைபோல் இல்லாமல் மனநிம்மதி இல்லாத வாழ்க்கையையே வாழ்வோம்.

அப்படி அனைத்து விஷயங்களுக்கும் மற்றவரை ஒப்பிட்டு பார்ப்பவர்களா நீங்கள்? அப்போது இந்த ஐந்து வழிமுறைகள் உங்களுக்கானதுதான்..

இந்த நபர்களை UNFOLLOW செய்யுங்கள்:

பொதுவாக யூடியூப், இண்ஸ்டா மற்றும் சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிடும் வீடியோக்களை பார்த்து “நம் வாழ்க்கை அப்டி இல்லையே!” என்று கவலைப்படுவது போல் உங்களுடைய மனதில் தோன்றினால் உடனே அதுபோன்ற வீடியோக்கள் பார்ப்பதை அன்ஃபாலோ அல்லது அன்சப்ஸ்கிரைப் செய்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதினால் வீடியோவில் தோன்றும் நபர்களுடன் நம்மை ஓப்பிட்டுக்கொள்ளும் எண்ணம் குறையத் தொடங்கும்.

தோல்விகளை எதிர்க்கொள்ளுங்கள்:

உங்கள் இலக்கிற்கான பாதையில் பயணிக்கும்போது மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். அவர்களை போல் நாம் இல்லையே என்று எண்ணாதீர்கள். நீங்கள் செல்லும் பாதையில் எவ்வளவு தடங்கள் வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணியுங்கள். மற்றவர்கள் எளிதாக கடந்து செல்கிறார்களே என்ற எண்ணத்தை முழுவதுமாக கைவிடுங்கள். உங்களாலும் அவ்வாறு முடியும் என்பதை நம்புங்கள். இதற்கு உங்கள் மீதான தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய திறமைகளை கண்டறியுங்கள்.

கட்டுப்பாடுகளை தெரிந்துக்கொள்ளுங்கள்:

உங்களுக்கென்று ஒரு ரோல் மாடல் இருப்பார்கள் அவர்கள் எதில், எப்படி சிறந்து விளங்குகிறார்கள் நாம் அதன்மூலம் எப்படி நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக ஒப்பிட்டு கொள்ளலாம். இன்னும் அதிகமான பாதை செல்ல வேண்டுமே என்று வருந்தாதீர்கள். எவ்வளவு தூரம் கடந்து வந்தீர்கள் என்பதை எண்ணி பெருமைபட்டு கொள்ளுங்கள்.

தனித்துவத்தை கண்டறியுங்கள்:

தொடர்ந்து ஒருவரிடம் உங்களை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால் உங்கள் வாழ்க்கையே உங்களுக்கு மறந்துப்போய்விடும். நீங்கள் உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி மற்றவர்களுடன் ஒப்பிடாதபொழுது நீங்கள் தனித்துவமாக தெரிய தொடங்குவீர்கள்.

உங்கள் முயற்சி, திறமை தனித்துவமாக இருந்தால் வெற்றியும் அவ்வாறே அமையும். தனித்துவம் கொண்ட வெற்றி இந்த உலகத்தில் உங்களுக்கான இடத்தை பிடிப்பதற்கும் உங்கள் பெயரை இந்த உலகத்தில் அழியாமல் இருக்க வைக்கவும் உதவும்.

வெற்றிக்கான யுக்திகளை இழந்துவிடாதீர்கள்:

உங்களிடம் இருக்கும் வெற்றிக்கான யுக்திகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர் யுக்திகள் சிறந்தாக இருக்கிறதே என்று நம்முடைய யோசனைகளை கைவிட்டு அவர்கள் யோசனையை பின்பற்றினால் அது மிக பெரிய தோல்விக்கு வழிவகுக்கும்.

மற்றவரிடம் பயனில்லாத யோசனைகளை வாங்கி கையில் இருக்கும் வெற்றிக்கான யோசனைகளை இழந்துவிடாதீர்கள்.எந்த வழி சிறந்த வழி என்ற சந்தேகம் எழுந்தால் பல பேரிடம் அதனை பற்றி ஆலோசனை கேட்டு இறுதியாக நீங்கள் முடிவெடுங்கள். இதற்கு நமக்கான தேவைகளை நாம் நன்கு அறிந்துக்கொண்டால்தான் சரியான வழியை தேர்வு செய்ய முடியும்.

மற்றவருடன் ஒப்பிடுவதற்கு ஒரு கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ளுங்கள் இல்லையனில் அது உங்களை கட்டுப்படுத்த தொடங்கிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com