ஒரு கேள்வி கேட்டால் பல பதில்கள் சொல்லணும்! எப்படி?

ஒரு கேள்வி கேட்டால் பல பதில்கள் சொல்லணும்! எப்படி?

இறைவன், நம்மை இவ்வுலகிற்கு அனுப்புகையில், இவன் / இவள் இன்ன விஷயத்துக்கு தகுதியானவர் என்று எண்ணி அனுப்புகிறார். இதை ஏற்று நாம் நாமாக இருப்பது அவசியம்.

அறிவாளி செய்யும் வேலைகளை, அறிவற்றவர்கள் செய்ய இயலாது. ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கான தகுதிகள் வேண்டும். அவற்றை வளர்த்துக்கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். வெறுங்கை முழம் போடாது. இதைக் கூறும் ஒரு கதை பின்வருமாறு:

“புத்திசாலியான மந்திரி ஒருவர், அவருடைய மன்னருக்கு எத்தகைய பிரச்னை வந்தாலும், அதற்குண்டான தீர்வை தெளிவாக சொல்லுவது வழக்கமாதலால், மன்னருக்கு மந்திரியை மிகவும் பிடிக்கும். மந்திரியின் தம்பி விவசாயியாக இருந்தார். அண்ணன் உழைப்பு அதிகமின்றி  அதிகம் சம்பாதிக்கிறானே என்று பொறாமைப்பட்ட தம்பி, ஒருநாள் அண்ணனிடம், “நீ கொஞ்ச நாள் விவசாயத்தைப் பார். எனக்கு மந்திரி பதவி வாங்கிக் கொடு” என்று கேட்டான். அவனது நச்சரிப்புத் தாங்க முடியாமல், மந்திரியும் மன்னரிடம் சிபாரிசு செய்து, தம்பியை மந்திரியாக்கி விட்டார். மன்னருக்கு விருப்பமில்லையெனினும், கொஞ்ச நாள்தானே! பார்க்கலாம்! என்று பேசாமல் இருந்தார். இரண்டு நாட்கள் சென்றன. தம்பி ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் சாலையில் சில வண்டிகள் செல்கையில் “எத்தனை வண்டிகள் செல்கின்றன?” என மன்னர் பார்த்து வரச் சொன்னார். விவசாயி (மந்திரி) போய்ப் பார்த்துவிட்டு வந்து, “பத்து வண்டிகள் போகின்றன” என்றார்.

“வண்டியினுள் என்ன இருக்கிறது?” என மன்னர் கேட்கையில், இவருக்குப் பதில் தெரியாமல், ஓடிப் போய்ப் பார்த்து வந்து “நெல் மூட்டைகள்” என பதிலளித்தார்.

“நெல்மூட்டை என்ன விலை?” மன்னர் வினவ, மந்திரி ஓடிச்சென்று பதிலை வாங்கி வந்தார். இவ்வாறு மன்னரின் அநேக கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் அங்குமிங்கும் அலைந்து பதில் தேடினார்.

அச்சமயம் பழைய மந்திரி தற்செயலாக அங்கே வர, மன்னர் அவரிடம், “நீங்கள் வரும் வழியில் வண்டிகளைப் பார்த்தீர்களா?” என்று  கேட்டவுடனே, “ஆமாம் மன்னரே! பத்து வண்டிகள் நமது அரண்மனையைத் தாண்டி சென்றன. அதில் 200 நெல் மூட்டைகள் பாண்டிய நாட்டிற்குப் போகிறது.

நமது சோழ நாட்டில் மூட்டைக்கு ஐந்து ரூபாய். அங்கே ஏழு ரூபாய். இரண்டு ரூபாய் லாபம் கருதி, அங்கே விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு செல்கிறார்கள்.” தெளிவாக விரிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்.

இதைக் கேட்ட தம்பி தலை குனிந்தார்.

மன்னர், மந்திரியின் தம்பிக்கு சில பரிசுப் பொருட்களைக் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பினார்.

நாமும், அவரை மாதிரி செய்யலாம்; இவரை மாதிரி செய்யலாம் என்று மனம் நினைத்தாலும், ஆசைப்பட்டாலும், யோசித்து செயல்பட வேண்டும்.

நாம் வெவ்வேறான வரங்கள் பெற்றவர்கள் என்கிற கூற்றுப்படி, அவரவர் பணியை முழு மனதுடன் செய்தால், வாழ்வில் வெற்றி பெறலாம்.

மேலும் தகுதிகளை மேம்படுத்திக்கொண்டு, முயற்சியுடன் செயல்பட்டால், விருப்பங்கள் நிறைவேறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com