
பாசமிக்க உறவுகள், நல்ல வேலை எனத் தேவைக்கு அனைத்தும் இருந்தாலும், சிலரைப் பார்த்தால் ஏன்தான் வாழ்கிறோமோ எனும் ரீதியில் உற்சாகமற்று வாழ்வார்கள். அவர்களின் செயல்கள் சுறுசுறுப்பற்று முகத்தில் களை இழந்து கடமைக்கு வாழ்வது போன்று வாழ்வது அப்பட்டமாக தெரியும்.
இவர்கள் இப்படி இருக்க என்ன காரணம்? இவர்களிடம் கவனித்தால் ஒன்று புரியும். இவர்கள் தன்னையும் பாராட்டிக்கொள்ள மாட்டார்கள். பிறரையும் பாராட்ட மாட்டார்கள். சரி அப்படி என்ன பிரச்சினை இவர்களுக்கு?
சுயபிரகடனம் பிடிக்காத நபர்களாக இருப்பதுதான் இவர்களின் இந்த தன்மைக்கு காரணம். சுயபிரகடனம் என்பது சரியா என்பது சிலரின் கேள்வி ? நிச்சயம் சரியே என்கிறார் அமரிக்காவின் பிரபல தன்னம்பிக்கை எழுத்தாளரும் பேச்சாளருமான லூயிஸ் எல் ஹே அவர்கள்.
இவரின் தத்துவங்கள் சுயப்பிரகடனங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். Mirror Work எனப்படும் கண்ணாடி முன் நின்று நம் கண்களை உற்று நோக்கி நமது சுயப்பிரகடனங்களை கூறும் பயிற்சி சிறப்பாக கருதப்படுகிறது . நமக்கு நாமே தரும் ஒரு அற்புதமான பரிசுதான் இந்த கண்ணாடிப் பயிற்சி எனலாம். நமது செய்கைகளுக்கு நாமே காரணம் எனும்போது வெற்றியை நோக்கிச் செல்லவைக்கும் உந்து சக்தியாகவே இந்த கண்ணாடிப் பயிற்சி விளங்குகிறது.
கண்ணாடி முன் நின்று கண்களை கூர்ந்து பார்த்தபடி “நான் என்னை நேசிக்கிறேன். அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் “ என்று திரும்பத்திரும்ப கூறும்போது இந்த உலகமே நம்மை விரும்பும் பாதுகாப்பான இடமாக நம்மால் உணரமுடியும்.
நேர்மறையான சுயபிரகடனம் நம் ஆழ்மனதில் நம்பிக்கை அளித்து நன்மையான எண்ணங்களை வளரச் செய்வதால் நம்முடைய சுயநம்பிக்கை சுயமரியாதையை அதிகரிக்கச் செய்கிறது. இந்தக் கண்ணாடி பயிற்சியானது நமக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தும். எத்தகைய எண்ணங்கள் செயல்களை மேற்கொண்டால் வெற்றிகரமாக வாழ்வை ஆக்க முடியும் என்பதை தெளிவாக்கும். வாழக்கை சந்தோசமாக இருக்க நாம் என்ன மாதிரியான எண்ணங்களை விலக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.
நாம் ஒரு நல்ல செயல் செய்தால் வேறு யாரும் பாராட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள். நம்மை நாமே பாராட்டிக் கொள்வதுதான் சிறந்தது. கண்ணாடி முன் நின்று நன்றி நன்றி இந்த நல்ல செயல் செய்ததற்கு மிக்க நன்றி என்று மனம் விட்டுப் பாராட்டுங்கள். அதே போல் நாம் எதிர்பாராத விதமாக தவறுகள் நிகழும் போதும் கண்ணாடி முன் நின்று, நான் உன்னை நேசிக்கிறேன் எல்லாம் மாறக்கூடியவையே தவறு செய்துவிட்டாய். ஆனால் தளராதே. தவறை உணர்ந்து உயிர்த்தெழு. நான் உன்னை எப்போதும் நேசிப்பேன் என்று கூறுங்கள்.
இனி காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்லும் முன்னும் கண்ணாடியின் முன் நின்று “நான் என்னை நேசிக்கிறேன்... ஏற்றுக்கொள்கிறேன்” என்று ஐந்துமுறை கூறிப்பாருங்கள். அதனுடன் நாள் முழுவதும் நேர்மறையான செய்திகளை மட்டும் செவி மடுத்துக் கேளுங்கள்.
இந்தப் கண்ணாடிப் பயிற்சியை தொடர்ந்து செய்தால் கலகலப்பாக மாறும் வாழ்க்கை.