
நம்முள் பெரும்பாலான நபர்கள் வாழ்க்கை எப்பொழுதும் எளிதாக இருக்கும் படியாகவே விரும்புகிறார்கள். ஆனால் நாம் தொடக்கத்திலேயே எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றிவிட்டால், எதிர்காலத்தில் நிச்சயம் பல தருணங்களில் அது கடினமான விளைவுகளை நமக்குக் கொடுக்கக்கூடும். ஒரு கடினமான வாழ்க்கை என்பது நாம் வெளியேற முடியாத கருந்துளையைப் போன்றது. அது நாம் முக்கியமாய் செய்ய வேண்டிய செயல்களையும் செய்யவிடாமல் தடுத்து நிறுத்திவிடும்.
நானும் சிறுவயதிலிருந்தே வாழ்க்கையை நாம் விரும்பும் படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்தவன் தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு, நிஜ உலக உண்மை நாம் விரும்பியதுபோல் இந்த வாழ்க்கை இருக்காது என்பதை எனக்கு உணர்த்தியது. நாம் எந்த அளவுக்கு எளிதான வாழ்க்கையை தேடிச் செல்கிறோமோ, அந்த அளவுக்கு வாழ்க்கை கடினமாகவே மாறுகிறது என்பதே உணர்ந்தேன்.
நாம் நன்றாகப் படித்தால், நல்ல வேலைக்கு சென்று நல்ல சம்பளம் பெற்று வாழ்வில் கஷ்டமின்றி இருக்கலாம் என்பதே பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. இது உண்மைதான் என்றாலும், பலர் இதை வெறும் கனவாக மட்டுமே வைத்துள்ளார்கள். இதற்கான முயற்சிகளை யாரும் எடுப்பதில்லை. எதிர்காலத்தில் எளிதான வாழ்க்கையைப் பெற தொடக்கத்தில் கடினமான பாதையை தேர்வு செய்வது அவசியமாகும்.
கல்வி கற்பது கடினம்.
புதிய திறன்களை கற்றுக் கொள்வது கடினம்.
தவறாமல் தினசரி உடற்பயிற்சி செய்வது கடினம்.
ஆரோக்கியமாக சாப்பிடுவது.
கடினம் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவது கடினம்.
ஆனால் உண்மை என்னவென்றால், இந்த விஷயங்கள் இந்த நேரத்தில் மட்டுமே கடினமாக இருக்கும். இவை அனைத்தையும் நீங்கள் கடினம் என நினைத்து நீங்கள் மறுப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?
மோசமான வேலை.
மோசமான உடல்நிலை.
நேரமின்றி உழைத்தல்.
வாழ்க்கையின் பல பொறுப்புகளால் ஏதோ ஒரு கூண்டில் அடைக்கப்பட்டதை போன்ற உணர்வு.
இதுதான் உங்களுக்கு பரிசாகக் கிடைக்கும். சொல்லப்போனால் இதுவும் கடினமானது தான். எனவே இரண்டாவது கடினமான சூழலுக்கு நீங்கள் தள்ளப்படாமல் இருக்க, முதலில் நான் கூறிய கடினமான விஷயங்களைச் செய்வது சிறந்தது. அவை உங்கள் வாழ்க்கையை மேன்மைப்படுத்தும் கடினமானவை. எனவே நீங்கள் எந்த ஒரு விஷயத்தை கடினமாக நினைத்தாலும் அது உங்கள் வாழ்க்கையை மேன்மைப் படுத்தக் கூடியதாக இருந்தால், எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை செயல்படுத்துவது நல்லது. அதுவே உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் பாதைக்கு கொண்டு செல்லும்.
எனவே, நீங்கள் உண்மையிலேயே எளிதான வாழ்க்கை வாழ விரும்பினால், தொடக்கத்தில் உங்களை மேன்மைப் படுத்தும் கடினமான விஷயங்களைத் தேர்வு செய்யுங்கள்.