
நம்முள் பலரும் அதிகப்படியான சுயமுன்னேற்ற சார்ந்த விஷயங்களை படித்தும், பார்த்தும் வருகிறோம். இப்படி நல்லது என நினைக்கும் சுய முன்னேற்றப் பதிவுகளே நமக்கு கெட்டதாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தங்களின் வாழ்க்கை முறை ஒரு ரோபோக்கள் போல மாறும் அளவுக்கு ஆற்றலைப் பயன்படுத்தும் பல நபர்கள் இந்த சுய முன்னேற்றத்தால் மாறியுள்ளனர். இது ஒரு மென்பொருளை புதுப்பிப்பது போல வேலை செய்து, பின்னர் அவர்களின் நோக்கங்கள் முற்றிலுமாக மறையும்படி செய்துவிட்டது. சுய முன்னேற்றம் என்பது முற்றிலும் வரையறுக்க முடியாத ஒன்று. இது உங்களுக்கும் எனக்கும் வித்தியாசமானதாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை சுய முன்னேற்றம் என்பது காலையில் 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி கூடம் செல்வதாக இருந்தால், உங்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமான உணவை சாப்பிடத் தொடங்குவதாக இருக்கும். மனிதர்களாகிய நம்மால் ஒரு வரையறைக்குள் கட்டுப்பட முடியாது. அது நம்முடைய ஆளுமைகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது. Ikigai என்ற புத்தகத்தில் இதுகுறித்து நன்றாக விளக்கி இருப்பார்கள். மேலும் இதைப்பற்றி ஆராய்ந்தபோது "மியாமோட்டோ முசாஷி" என்ற நபரின் வாழ்க்கை தத்துவங்கள் பற்றி அறிய நேர்ந்தது.
சுய முன்னேற்றம் பற்றிய அவரது யோசனை மிகவும் நேரடியானது. சுய ஒழுக்கத்தை கற்றுக் கொள்வதற்கு பதிலாக அதை அவர் பயிற்சி செய்யச் சொல்கிறார். சுய முன்னேற்றம் என்பதை வெறும் நினைவில் மட்டும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. நம் உடலையும் மனதையும் உள்ளடக்கிய ஒரே பாதையில் பயணிக்கும் ஒன்றாக அவர் நம்பினார்.
உண்மையான வளர்ச்சிக்கு, ஒருவரின் திறமைகளை மேம்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தேவை என்பதை அவர் புரிந்துகொண்டார். அதன் பின்னர் அவர் எழுதிய புத்தகம் தான் "தீ புக் ஆப் பைவ் ரிங்ஸ்". அப்புத்தகத்தில் ஒரு மனிதனின் தினசரி பயிற்சி மற்றும் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
"உங்களுக்கு வெளியே எதுவும் இல்லை. உங்களுக்கு உள்ளேதான் எல்லாம் இருக்கிறது. அதனால் மட்டுமே உங்களை சிறப்பாகவும், வலுவாகவும், பணக்காரராகவும், புத்திசாலியாகவும் மாற்ற முடியும். உனக்கு வெளியே எதையும் தேடாதே."
முசாஷி எளிமையான விஷயங்களை நம்பினார். ஒருவரின் தேவையற்ற இயக்கங்கள் மற்றும் நுட்பங்களை அகற்றி எதையும் எதிர்த்து போராடுவதற்கான குறைந்தபட்ச அணுகுமுறையை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். எனவே சுய முன்னேற்றம் என்பதை முழுமையாக நம்பாமல், நீங்கள் செய்யும் செயல்களாலேயே மாற்றம் நிகழும் என்பதை அறிந்து செயல்படுங்கள்.