வெற்றிக்கு வழி வகுக்கும் இரண்டு மந்திரச் சொற்கள்!

வெற்றிக்கு வழி வகுக்கும் இரண்டு மந்திரச் சொற்கள்!

னிதராகப் பிறந்த அனைவருக்கும் கனவுகள் உண்டு. அந்தக் கனவில் முதன்மையாக இருப்பது மற்றவர் போற்றும்படி வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே. "கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்" என்று கலாம் அவர்கள் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு கனவுகளில் மட்டுமே வாழ்ந்து, முயற்சி எதுவும் இன்றி இருந்தால் வெற்றி சாத்தியமா?

புதுத் துறையில் நுழைய மனது விரும்பினால் அதைப் பற்றி அறிந்துகொள்வதிலிருந்து ’ஸ்டார்ட்’ செய்யுங்கள். முறையாக ’ஸ்டார்ட்’ செய்யப்பட்ட எதுவும் சிறப்பாகவே தொடரும்.

நம் வீட்டுப் பெரியவர்கள் அடிக்கடி நமக்கு ஒரு புத்திமதியை சொல்வார்கள். “எதையும் தொடங்கும் முன் யோசி. நிறுத்தனும்னு மனசு சொல்லுச்சுனா யோசிக்காம நிறுத்து” இவ்வளவுதாங்க... இந்த ரெண்டு விசயத்தையும் கடைப்பிடிச்சா கண்டிப்பா வெற்றிதான்.

இந்த மாடர்ன் உலகத்துக்கு புரியும்படி சொல்லணும்னா ‘ஸ்டார்ட்’ செய்யும் முன் ஆயிரம் தடவை யோசித்து இறங்கலாம். ‘ஸ்டார்ட்’ செய்து செயலில் இறங்கிட்டா போகும் பாதையில் மட்டும் கவனமாக இருக்கும் குதிரை போல் முன்பின் அக்கம்பக்கம் பார்க்காமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொள்ளவேண்டும். ஸ்டார்ட் செய்யத் துணிவு அவசியம். அந்தத் துணிவே பாதகமாகும் என்றால்?

அதற்குத்தான் ‘ஸ்டாப்’. நாம் ஸ்டார்ட் செய்யும் விஷயத்தில் கவனமாக இருக்கும்போதே, ‘ஸ்டாப்’ செய்யவும் உஷாராக வேண்டும். உதாரணத்திற்கு மனசு சொல்வதைக் கேட்டு  ஒரு சூழலில் ஸ்டார்ட் செய்த விஷயம் மற்றொரு சூழலில் வேறாக இருக்கும்.

போற பாதையில கல்லும் முள்ளுமா நிறைஞ்சு கிடக்கு.  கடைசியாக நம்மைக் கொண்டு போய் விடும் இடத்தில் பசியுடன் புலி ஒன்று காத்துக்கிட்டுருக்கு  என்று தெரிய வந்தால் என்ன செய்வீர்கள்? நாமதான் ஸ்டார்ட் செய்தாச்சே… இனி ஸ்டாப் பண்ணி  திரும்பிப் போனா நம்ம ‘பிரெஸ்டீஜ்’ என்னாவது என்று யோசிப்பீர்களா? அல்லது என் பாதுகாப்புதான் முக்கியம் என்று ‘ஸ்டாப்’ செய்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வீர்களா?
இந்த இடத்தில் ஒரே செயல்  இரண்டு விஷயம். ஆம் ஸ்டார்ட்டும் ஸ்டாப்பும் தகுந்த நேரத்தில் துணிவுடன் எடுக்கப்படும் அறிவார்ந்த முடிவுகள்.

நம் வாழ்வியலின் எந்த அம்சமாகட்டும், நம் மனதுக்குத் தெரியும், ஒரு செயலை இந்த அளவு செய்தால் போதும், அளவை மீறும் இது இனி வேண்டாம் என்று. அந்த எச்சரிக்கை மணி ஒலிக்கும்போது நாம் விழித்துக்கொள்வது அவசியம்.

‘ஸ்டார்ட்’ ‘ஸ்டாப்’  எனும் லகான்களை நம் கையில் இறுக பற்றித் தேவைப்படும் சூழல்களில் தகுந்தபடி உபயோகித்தால் செல்லும் பாதை சிறப்படையும்.  அப்புறம் என்ன வெற்றிதான். இந்த இரண்டையும் மனதில் கொண்டு வாழ்வை சிறக்க வைப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com