உங்கள் வாழ்க்கையை மாற்றும் இரண்டு கேள்விகள்!
நாம் நம் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டுமென்றால் சில கேள்விகளை நம்மிடம் நாமே அவ்வப்போது கேட்டுக்கொள்வது அவசியமாகும். ஏனென்றால் ஏதோ ஒரு சிக்கலை நீங்கள் உங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும்போது, நீங்கள் ஏதோ ஒரு தவறான வழியில் பயணித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் பலர் இத்தகைய சிக்கலில் இருக்கும்போது ஏன் இப்படி இருக்கிறது? என்ற கேள்வி கேட்பதற்கு பதிலாக, அதற்கான ஏதோ ஒரு காரணத்தை அவர்களே மனதில் நினைத்துக் கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு பணம் சார்ந்த ஏதோ ஒரு சிக்கலில் ஒருவர் இருக்கும்போது, "என்னிடம் பணம் இல்லாததுதான் இந்த சிக்கலுக்குக் காரணம்" என சிந்திக்கிறாரே தவிர, "ஏன் என்னிடம் இந்த சிக்கலை தீர்க்கும் அளவுக்கு போதுமான பணம் இல்லை?" என சிந்திப்பதில்லை.
எனவே ஒரு பிரச்சனையை அணுகும்போது உங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட சிந்தனை தேவை. நீங்கள் உங்களிடம் இதுவரை கேட்கப்படாத கேள்விகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் பலர் இவ்வாறு சிந்திப்பதற்கான போதிய நேரத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை. இதனாலேயே பலர் தாங்கள் விரும்பாத தொழிலை செய்கிறார்கள். தவறான உறவில் இருக்கிறார்கள். தங்களுடைய வளர்ச்சிக்கு உதவாத இடங்களில் வேலை செய்கிறார்கள். தங்கள் ஆரோக்கியத்தை வீணாக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இத்தகைவர்கள், வாழ்க்கையில் எதுவுமே மிகப்பெரிய ஒரு செயலை செய்வது மூலமாக நடந்துவிடாது, அதற்கு பதிலாக ஒவ்வொரு நிலையையும் அடைய நாம் பல ஆண்டுகள் தினமும் சிறிய முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை உணர வேண்டும்.
நீங்கள் உங்கள் வாழ்வில் சிறப்பாக மாற வேண்டும் என்றால், 1. முதலில் உங்களிடம் அதிகம் கேட்கப்படாத கேள்விகளைக் கண்டறிந்து உங்களிடம் கேளுங்கள்.
குறிப்பாக உங்களைப் பற்றி நீங்கள் அதிகம் அறிந்து கொள்ளும்படியான கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.
நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
ஏன் என்னிடம் பணம் இல்லை?
நன்றாக படிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
உடல் எடையைக் குறைக்க தினசரி நான் எதில் ஈடுபட வேண்டும்?
என்னுடைய பலம், பலகினம் என்ன?
நான் என்ன திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
போன்ற உங்களைச் சார்ந்த பல கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
இரண்டாவது, இந்தச் செயலை நான் செய்வதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியை கட்டாயம் கேட்கவேண்டும். ஏனென்றால் நாம் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அதற்கு ஆழமான காரணம் இருந்தால் மட்டுமே அதை நம்மால் தொடர்ந்து கொண்டுசெல்ல முடியும். எந்தக் காரணமுமின்றி, அனைவரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என முயற்சித்தால், கடினமான தருணங்களில் நீங்கள் அந்த செயலை விட்டுக்கொடுத்துவிட வாய்ப்புள்ளது.
நீங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்த எதைத் தொடங்குவதாக இருந்தாலும் இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டுக்கொண்டு அதற்கான சரியான பதிலுடன் முயற்சியை மேற்கொண்டால், நீங்களும் சாதிக்கலாம்.