தொடர் உழைப்பு என்ன தரும்? 3.5 கோடி பெற்றுத் தரும்!

 Kevin Ford
Kevin Ford

பர்கர் கிங்கில் (Burger King)கடந்த 27 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்கு சென்ற ஊழியர் ஒருவருக்கு மூன்றரை கோடிக்கும் அதிகமான பணம் நன்கொடை மூலம் வந்துள்ளது. 

லாஸ் வேகாஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் பர்கர் கிங்-ல், கேஷியராகவும் சமையல்காரையாகவும் 'கெவின் போர்ட்' ( Kevin Ford)என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டில் பர்கர் கிங்-ல் 27 ஆண்டுகள் பணியாற்றியதைக் கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். அந்த காணொளியில் அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அவருக்கு கொடுத்த பரிசுப் பொருட்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்திருந்தார். அவருடன் பணிபுரிந்தவர்கள் சாக்லேட், பேனா, மூவி டிக்கெட், கீ செயின் போன்ற பொருட்களை அவருக்கு பரிசாகக் கொடுத்திருந்தனர். இந்த காணொளியைக் கண்டவர்கள் அவரிடம் இருக்கும் பரிசுப் பொருட்கள் மலிவானதாக உள்ளது, இதைத் தாண்டி அந்த நபர் அதிகப்படியான வெகுமதிக்கு தகுதியானவர் எனக் குறிப்பிட்டு பல கருத்துக்களைத் தெரிவித்தனர். 

இது குறித்து அந்த நபரின் மகள், நிதியைத் திரட்டும் பக்கமான 'GoFundMe' பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த பதிவில் "27 ஆண்டுகளுக்கு முன்பு என் சகோதரனையும் என்னையும் பாதுகாப்பதற்காக சிங்கிள் தந்தையாக தன் வேலையை செய்ய தொடங்கிய அப்பா, பின்னர் எங்கள் குடும்பம் நல்ல நிலைக்கு வந்ததும் அவர் மறுமணம் செய்து கொண்டார். பணியிடத்தில் அவருக்கு உடல் நலக் காப்பீடு வழங்கப்பட்டதால் தொடர்ந்து அங்கு பணியாற்றினார். இது அவருடைய நான்கு மகள்களையும் பள்ளி முதல் கல்லூரி வரை படிக்க வைக்க உதவியது. தனது இளமைக் காலம் முதல் தற்போது வரை அப்பா அங்கு தான் வேலை செய்கிறார். எந்த வகையிலும் நாங்கள் அவரிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை, அவரும் எங்களிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை" என பதிவிட்டிருந்தார். 

தற்போது அந்த நிதித் திரட்டும் பக்கத்தில் சுமார் 4,22,000 அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய மகள் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. முடிவைப் பற்றி சிந்திக்காமல் நம்முடைய உழைப்பில் கவனமாக இருந்தால், நமக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும் என்பதற்கான நல்ல உதாரணமாக இவர் திகழ்கிறார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com