
தற்போதெல்லாம் பல நபர்களுக்கு அவர்களுடைய வேலையை செய்வதற்கே அவர்களுக்கு மோட்டிவேஷன் தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்குத் தேவையான மோட்டிவேஷனை இணையத்தில் வீடியோக்கள் பார்ப்பது மூலமாக பெற்றுக் கொள்கிறார்கள்.
மோட்டிவேஷன் வீடியோக்களைப் பார்க்கும்போது இன்றே தன் வாழ்வில் அனைத்தையும் சாதித்துவிடலாம் என்ற அளவுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் அதுபோன்ற காணொளிகளை பார்த்த சில மணி நேரத்திலேயே அந்த மோட்டிவேஷன் நீர்த்துப் போகும். குறுகிய காலத்திற்கு மட்டுமே இத்தகைய மோட்டிவேஷன் காணொளிகள் உதவியாக இருக்குமே தவிர நீண்ட காலத்திற்கு இவை பலனளிக்காது.
நானும் எண்ணிலடங்காத மோட்டிவேஷனல் வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். தொடக்க காலங்களில் அவற்றைப் பார்ப்பதற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் அனைவருக்குமே வாழ்க்கையில் சில விஷயங்களை செய்துமுடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். மோட்டிவேஷன் வீடியோக்களை பார்க்கும்போது நாம் அதையெல்லாம் சாதித்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மனதில் ஏற்படும். ஆனால் காலம் செல்லச் செல்ல இவையெல்லாம் உண்மையான எண்ணம் அல்ல என்பது எனக்குப் புரிந்தது.
அவை மோட்டிவேஷன் வீடியோக்களை பார்க்கும்போது நாம் உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நிலை என்பதை தெரிந்துகொண்டேன். உண்மையிலேயே நம்முடைய செயல்களின் முக்கியத்துவத்தை அறிந்து அதை செய்ய வேண்டும் என்ற உந்துதல் நமக்கு ஏற்படாமல், ஏதோ ஒரு காணொளியைப் பார்த்து நமது வேலையை செய்வதற்கான தூண்டுதல் நமக்கு ஏற்பட்டால் அதை உணர்ச்சிவசப்படுவது என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.
உண்மையில் மோட்டிவேஷன் என்பது நம் மனதார செய்யும் வேலையில் இருந்து கிடைக்கும் முடிவுகள் மூலம் நமக்கு வருவதாகும். அதாவது நமக்கு ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்ற பெரிய இலக்கு இருக்கும். அதை படிப்படியாக செய்யும்போது நாம் செய்யும் முயற்சிகளில் இருந்து கிடைக்கும் சிறுசிறு வெற்றிகளும், அதைத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை நமக்கு அளிக்கும். அதுதான் உண்மையான மோட்டிவேஷன். நம்முடைய செயல்களில் இருந்து நமக்கு கிடைக்கும் உத்வேகம்தான் சிறந்த மோட்டிவேஷன் என நினைக்கிறேன். இதை பல தருணங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். நீங்களும் உணர்ந்திருக்கலாம்.
எனவே உண்மையான மோட்டிவேஷன் என்பது நீங்கள் செய்யும் செயல்களிலிருந்து உங்களுக்கு தானாக கிடைப்பது தானே தவிர, ஏதோ ஒரு காணொளியைப் பார்த்து அல்லது புத்தகத்தைப் படித்து எந்த ஒரு செயலையும் செய்யாமல் மனதிற்குள் ஏற்படும் உணர்ச்சி அல்ல. எனவே மோட்டிவேஷன் வீடியோக்களை நம்பாமல் உங்கள் செயலிலிருந்து கிடைக்கும் உத்வேகத்தை நம்புங்கள்.