ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான குறிக்கோள்கள் இருக்கும். ஒன்று அனைத்து வசதிகளுடன் வளமாக வாழ்வது. இரண்டாவது சந்தோஷமாக இருப்பது. இந்த இரண்டையும் ஒரு மனிதர் அடைவதற்கு மிக மிக முக்கியமான காரணியாக இருப்பது தன்னம்பிக்கை.
மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கைக்கு, ஏழு முக்கியமான தன்னம்பிக்கை எண்ணங்களை ஒருவர் எப்போதும் கொண்டிருக்க வேண்டும் என்று பட்டியலிடுகிறார் நெப்போலியன் ஹில்.
1. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை என்னால் திறமையாக செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.
2. என்னுடைய எண்ணங்கள் வலிமை பெற்று, வடிவமும் பெற்று அவை இந்த உலகில் செயல்களாகவும் மாறும் என்பதை நான் நம்புகிறேன்.
3. என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளவும் என் இதயத்தில் இருந்து புன்னகை செய்யவும் நான் கற்றுக் கொண்டேன்.
4. எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக, பாதியில் விடுவதை நான் செய்வதில்லை.
5. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பற்றிய தெளிவான திட்டமிடல் எனக்கு இருக்கிறது. அதை சிறப்பாக செயல்படுத்து வதற்கான விதிமுறைகளை நான் நிச்சயம் கடைப்பிடிப்பேன்.
6. எதிர்மறை எண்ணங்களை அகற்றினால் தான் வெற்றியடைய முடியும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். என் மனதில் இருந்த அச்சத்தை எடுத்து விட்டு துணிச்சலையும், சந்தேகத்திற்கு பதிலாக நம்பிக்கையையும் மக்கள் மேல் இருக்கும் வெறுப்பிற்கு பதிலாக பேரன்பையும் நிரப்பி இருக்கிறேன்.
7. என் எண்ணங்களை தெளிவாக விளக்கிச் சொல்லவும், சொந்தக் காலில் சுயமாக நிற்கவும் பழகுவேன்.
இந்த ஏழு தன்னம்பிக்கை எண்ணங்களையும் நன்றாக மனதில் பதிய வைத்த பின் நம்முடைய இலக்கை அடைவதற்கு மூன்று முக்கியமான செயல்களை செய்ய வேண்டும்.
1. நம்முடைய இலக்கை வடிவமைத்து அதை மனக்கண்ணில் காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும்.
2. உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கான வாய்மொழி இலக்கு உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
3. இலக்குகளை தெளிவாக காகிதத்தில் எழுத வேண்டும். அப்போதுதான் எண்ணங்கள் உயிர் பெற்று செயல் வடிவம் பெறும் .
மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை விதிமுறைகளும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. பிரபலமான விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ச்சி செய்து தங்களுடைய வாழ்வில் செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதனுடைய சிறப்பம்சம்.