மயிலார் பண்டிகை!

மயிலார் பண்டிகை!

பொங்கலைத் தொடர்ந்து வரும் பண்டிகை மயிலார். உழைப்பாளி மக்கள் பொங்கலுக்கு பிறகு மயிலார் வரை பணி செய்ய மாட்டார்கள். பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி பின் ஓய்வெடுக்கும் நாளாக மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர்.

பொங்கல் முடிந்த 8ம் நாள் மயிலார் கொண்டாடப் படுகிறது. தறி செய்வோர், சலவையாளர் முதலிய உழைக்கும் வர்க்கத்தின் பண்டிகையாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அன்று வீட்டில் பூஜை மாடத்தின் சுவரில் கோவை இலைகளைக் கொண்டு சதுரமாக தீட்டுவர். அது பச்சையான பின்னணியில் அமையும். அதன் மீது வெள்ளை வண்ணத்தால் தோகையை விரித்தாடிக் கொண்டிருக்கும் மயிலையும், வேலாயுதத்தையும் வரைவார்கள். மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து அதன்மீது பூக்களை ஒட்டி அழகுபடுத்துவர்.

சலவையாளர்கள் துணி வெளுக்கும் சால்களின் மீது மயில் படத்தை வரைந்து வழிபடுவதும் உண்டு. மயில் என்பது ஆயிரங்கண் பறவையாகும். தொழிலில் ஆயிரம் விதமான நுணுக்கங்கள் உள்ளது என்பதை மயில் உணர்த்துகிறது.

வேலை செய்யும்போது தேவையான நுணுக்கங்களை அருளும் விதமாக மயிலாக உருவகம் செய்து வழிபடு கின்றனர். போர்க் கருவிகளில் துர்க்கை இருந்து வெற்றியை அருள்வது போலவே, தொழிற்கருவிகளில் மயிலம்மை உடனாய பல தேவதைகள் இருந்து அருளாசி வழங்கவேண்டுகின்றனர்.

இந்நாளில் இடப்படும் படையலில் மொச்சை, கொள்ளு, துவரை முதலான தானியங்களை கொண்டு செய்த குழம்பு, கூட்டு முதலியவற்றை படைப்பர். சோற்றுக்குள் வைத்து ஆறு சிறிய உருண்டைகள் செய்து ஆறு மயில் இறகுகளை முதன்மை இலையில் வைத்து படைக் கின்றனர்.

பூஜை முடிந்ததும் பெண்கள் இச்சோற்று உருண்டைகளை அப்படியே விழுங்கி விடுகின்றனர். இதனால் நல்ல இல்லற வாழ்வு நிலைக்கும் என்று நம்புகின்றனர்.

இது தொழிற்கருவிகளில் உறையும் தெய்வங்களை நினைத்து வழிபடும் வழிபாடாகும். பணி செய்யும்போது தொழிற் கருவிகளால் காயம் ஏற்படாமல் இருக்கவும், தொழிலில் எந்தவித இடையூறு ஏற்படாமல் இருக்கவும் வேண்டி துதிக்கின்றனர்.

தொழில் நுணுக்கங்கள் கை வரப் பெறவும், பல பயன்களைத் தர வேண்டி செய்யும் வழிபாடாக இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. பல இடங்களில் மயிலார் பண்டிகையை முருகனை நோக்கி வேண்டும் வழிபாடாக மாறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com