சமையல் ஒன்றும் மேஜிக் எல்லாம் இல்லை. கொஞ்சம் கவனம் எடுத்தால் போதும் கைமணம் நமக்கும் வரும். கமகம்க்கும் சமையலுக்கு அனுபவத்தில் அறிந்த வழிகள் இதோ உங்களுக்காக…
* குழம்பு ரசம் வைத்து இறக்கும்போது அதில் சிறிது பெருங்காயத்தையும் நறுக்கிய கறிவேப்பிலை கொத்துமல்லியையும் சேர்த்து மூடி வைத்தால் வாசனை தூக்கும்.
* புளிசேர்த்து செய்யும் குழம்பு மசாலா வகைகளுக்கு சிறிது வெல்லம் சேர்த்தால் மேலும் ருசி சேர்க்கும்.
* ரசம் வைக்கும்போது நெய்யில் கடுகு இரண்டு பூண்டு தட்டிப் போட்டுத் தாளித்து சேருங்கள். ரசம் டேஸ்ட் அள்ளும்.
* சேனை, உருளை ரோஸ்ட் செய்யும்போது சிறிது சோம்பு மிளகை வறுத்துக் கொரகொரவென்று அரைத்து இறக்கும்போது சேருங்கள்.
* பூரிமசால் என்றாலும் கடுகு தாளிக்கும்போது சிறிது சோம்பையும் சேர்த்தால் பட்டை லவங்கம் இல்லாமலே அந்த ருசி தரும்.
* இஞ்சி பூண்டு விழுதில் இஞ்சி குறைவாகவும் பூண்டு அதிகமாகவும் அரைத்து சேருங்கள். இஞ்சியின் கசப்புத் தன்மை ருசியை மட்டுப்படுத்தும்.
* கமகமக்கும் மணத்துக்கு கியாரண்டி தருவது பொதினா. ரசத்திலும் இன்னும் சில பொருத்தமான வகைகளிலும் சிறிது பொதினாவை சேர்த்துப் பாருங்கள்.
* தக்காளி ரசம் செய்ய தக்காளிகளை அடித்து வடிகட்டி அதில் மிளகு ஜீரகத்துடன் பட்டை இலவங்கம் இரண்டு தட்டிப் போட்டால் மசாலா ரசம் மணக்கும்.
* எண்ணையில் வதக்கும் வெங்காயம் சிம்மில் வைத்து பொன்னிறமாகவும் சேர்க்கும் இஞ்சி பூண்டு விழுது வாசம் வரும் வரையும் வதக்குவது சமையலில் முக்கியம்.
* நேரம் கருதி அதிக சூட்டில் வைப்பதை விட நேரம் பார்க்காமல் மிதமான சூட்டில் செய்யப்படும் குழம்பு மசாலாக்கள் எண்ணெய் பிரிந்து தனிசுவை தரும்.