நற்பயன் தரும் பானகம்!

நற்பயன் தரும் பானகம்!

- க. பிரவீன்குமார்

- ஆதிரை வேணுகோபால்

பானகம். இந்த வார்த்தையை, நம் ஊர்ப் புறங்களில் , திருவிழா காலங்களில் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். சில பேர் குடித்திருப்போம். பானகம் என்றால் என்ன? வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு போன்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து, தயாரிக்கப்படுகிற ஒரு நீராகாரம்தான், இந்த பானகம். இதை, பானகம், பானக்கம், பானகரம் என்று ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடையது. நம் கிராமப்புறங்களில், இது ரொம்பவே புகழ் வாய்ந்தது என்று சொல்லலாம். குறிப்பா, திருவிழா காலங்களில் பால்குடம் எடுக்கிறவர்கள், காவடி தூக்குகிறவர்கள், பாதயாத்திரை போகிறவர்களுக் கெல்லாம், ஒரு உற்சாக பானம், இந்த பானகம். இந்த பானகம், உடல் களைப்பைப் போக்கி, புதுச் சக்தியைக் கொடுக்கும். இதனாலோ என்னவோ, நாம் இப்பானத்தை திருவிழா சமயங்களில், குடிப்பதுடன் சரி. மற்ற சமயங்களில் எல்லாம் இதை மறந்துவிடுகிறோம்.

பானகம் வெறும் ஆற்றல் தரும் பானம் மட்டும் இல்லை. ஆயுர்வேதத்தில், இதனின் பங்கு முக்கியமானது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். அது மட்டும் இல்லை, ஆயுர்வேதத்தில், குளுக்கோஸிற்கு நிகரான ஆற்றல் தரக்கூடிய ஒரு பானம்தான் இந்த பானகம்.

இப்பானகம் தரக்கூடிய ஆயுர்வேத பலன்களைப் பார்க்கலாம். ஆயுர்வேதத்தில் இது பானக கல்பனா, என்று அழைக்கப்படுகிறது. 'கல்பனா' என்றால் "தயார் செய்தல்" எனும் பொருள். ஆயுர்வேதத்தில் உடனடியாக நிவாரணம் தரக்கூடிய மருந்துகளில், இந்தப் பானகமும் ஒன்று. சில மருந்துகளை நாம் சாப்பிட்டால் முதலில் ஜீரணம் ஆகும். அதன்பிறகு, இரத்தத்தில் கலந்து, மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதனுடைய வேலையைத் தொடங்குவதற்குச் சிலமணி நேரம் எடுத்துக் கொள்ளும். இந்தப் பானகம் சாப்பிட்ட உடனே வேலை செய்யத் தொடங்கும் ஒரு மருந்தாகும். அதனால்தான், இந்தப் பானகத்தை, குளுக்கோஸிற்கு முன்னோடி என்று நாம் சொல்கிறோம். இதனின் மகத்துவத்தை அறிந்ததால்தான், நம்முடைய முன்னோர்கள், திருவிழா காலங்களில், பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய, நீரிழப்புக்குத் தீர்வாக, இந்தப் பானகம் வழங்கினர். இதனை வெயில் காலத்தில் மட்டுமில்லாமல் எல்லாக் காலத்திலும் அருந்தலாம்.

இந்த ஆற்றல் மிகுந்த பானகம் எப்படி செய்வது?

இதோ உங்களுக்காக பானகம் ரெசிபி…

தேவையான பொருட்கள்:

வெல்லம் -அரை கப்

தண்ணீர் -ஒன்றரை கப்

எலுமிச்சை சாறு- ஒரு டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி -அரை டீஸ்பூன் மிளகுத்தூள் -ஒரு சிட்டிகை

ஏலத்தூள் கால் டீஸ்பூன்.

செய்முறை:

வெல்லத்தை நீரில் சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அதில் சுக்கு பொடி, ஏலப்பொடி, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க பானக நைவேத்தியம் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com