வித்தியாசமான வெள்ளரிக்காய் இட்லி! தொட்டுக்க வெள்ளரிக்காய் சட்னி!

வித்தியாசமான வெள்ளரிக்காய் இட்லி!
தொட்டுக்க வெள்ளரிக்காய் சட்னி!

தினமும் புதுப்புது ருசிகளில் சமையல் செய்து மற்றவர்களை அசத்துவது சாப்பாட்டுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். அதிலும் சத்துள்ள பொருட்களால் அதுவரை செய்யாத ரெசிபிகளை செய்து அது நன்றாக வந்து விட்டால் மனசு அவ்வளவு சந்தோசமாக மாறும்.   

வெள்ளரிக்காயில் விட்டமின் ஏ பொட்டாசியம் நீர்சத்துக்கள், நார்சத்துக்கள் அடங்கியுள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்ல, பித்தத்தை குறைக்கவும், மலச்சிக்கல் நீங்கவும் உதவுகிறது. சர்க்கரை லெவலை கண்ட்ரோல் செய்து சிறுநீரை நன்றாக பிரிய வைப்பதுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். அப்படிப்பட்ட வெள்ளரிக்காயில் இட்லி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசிக் குருணை - ஒரு கப்

புழுங்கல் அரிசி -  ஒரு கப்

வெள்ளரிக்காய் துருவியது-  ஒரு கப்

தயிர்-  ஒரு கப்

பச்சை மிளகாய் விழுது –காரத்திற்கேற்ப

துருவிய தேங்காய் - ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – நறுக்கியது  

உப்பு-  தேவையான அளவு

தாளிக்க – எண்ணெய் , கடுகு , கருவேப்பிலை

செய்முறை:

மேற்கூறிய எல்லா பொருட்களையும் மூன்று முதல் நான்கு மணி நேரம் தயிரில் ஊறவைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து சில மணி நேரம் கழித்து தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து மாவுடன் சேர்த்து இட்லி ஊற்றவேண்டும். இந்த இட்லிகளை 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதனை இட்லி தட்டுகளிலும் வேக வைக்கலாம் அல்லது ஒரு தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி வேகவைத்து தட்டில் கவிழ்த்து சதுரமாக வெட்டியும் பரிமாறலாம். இதற்கு தேங்காய் சட்னி, இட்லி மிளகாய் பொடி நன்றாக இருக்கும் வெள்ளரிக்காய் இருந்தால் அதிலேயே சட்னி செய்தால் புதுமையாக இருக்கும் . தேவைப்பட்டால் சோடா உப்பு சேர்க்கலாம்.

வெள்ளரிக்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வெள்ளரிக்காய்-  ஒன்று

கொத்தமல்லித்தழை – அரைக்கட்டு  

பச்சை மிளகாய்- இரண்டு ( காரத்திற்கேற்ப )

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம்- கால் டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எலுமிச்சை சாறு - தேவையான அளவு

செய்முறை:

    எலுமிச்சை சாறு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சிறிது நீர் விட்டு பச்சையாக அரைத்து நமக்கு தேவையான அளவு எலுமிச்சை சாறும் உப்பும் சேர்த்துக் கலந்தால் சுவையான சட்னி ரெடி. இதனை சப்பாத்தி பிரட்டில் தொட்டும் சாப்பிடலாம். இட்லி தோசைக்கு சூப்பர் டிஷ் இது.  அதிக நேரம் வைக்காமல் உடனே சாப்பிடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com