அம்மியில் அரைத்தெடுக்கும் துவையல்கள்!

சமையல் டிப்ஸ்!
அம்மியில் அரைத்தெடுக்கும் துவையல்கள்!

ழக்கொழிந்து போன ஒரு பொருள் இன்றும் நம் பேச்சை விட்டு வழக்கொழிந்து போகாமல் தொடர்ந்து நம்மோடு பயணித்துக்கொண்டிருக்கிறது என்றால் அது 'அம்மிக்கல்' தான். என்னதான் நவீன வசதிகள் வந்துவிட்டாலும் அம்மியில் அரைத்தெடுக்கும் துவையலின் ருசியும் மணமும் தனிதான்!

இரண்டு கப் தூதுவளை இலைகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை காய வைத்து, கீரையை அதில் போட்டு நன்கு வதக்கி எடுக்கவும். பிறகு மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஐந்து காய்ந்த மிளகாய், நெல்லிக்காய் அளவு புளி, நாலு பூண்டு பல், சேர்த்து நன்கு வதக்கி, எல்லா வற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான உப்பு சேர்த்து அம்மியில்  அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி இறக்கி சூடான சோற்றில் பிசைந்து ஒரு உருண்டை சாப்பிட, சளியாவது, இருமலாவது... இருந்த இடம் தெரியாமல் துண்டக் காணோம்... துணியக் காணோம்ன்னு பறந்து ஓடிவிடும்.

ரெண்டு கப் முடக்கத்தான் கீரையை நன்கு அலசி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, கீரையை அதில் போட்டு நன்கு வதக்கி எடுத்து மீண்டும் சற்று எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், 6 காய்ந்த மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 5 பல் பூண்டு, இஞ்சி சிறு துண்டு, 2 தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அதில் கீரை, உப்பு, சிறிதளவு புளியையும் சேர்த்து, மீண்டும் ஒருமுறை வதக்கி எடுத்து ஆறவைத்து அம்மியில் அரைத்து சூடான மெல்லிய இளம் தோசையுடன் தருவார்கள். (சிறு கசப்புடன்தான் இருக்கும் இந்தத் துவையல்) சூடான இளந்தோசையும், துவையலும் சூப்பராக இருக்கும்.  வாய்வு தொந்தரவை நீக்கும் என்று வாரம் ஒரு முறை செய்துகொடுப்பார்கள். 

அரைக் கப் சுண்டைக்காயைக் கழுவி இரண்டாக நறுக்கிக்கொண்டு, பத்து சின்ன வெங்காயம், ஐந்து பூண்டு பல் ஆகியவற்றை தோல் உரித்து  இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கி, எல்லாவற்றையும் வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, பின்னர் தேவையான உப்பு சிறிதளவு புளி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, இறக்கி ஆற வைத்து அம்மியில் அரைத்து எடுக்க கமகம மணத்துடன் சுண்டைக்காய் துவையல் தயாராகி விடும். (சுண்டைக்காய் பிஞ்சாக இருந்தால் துவையலின் மணம் சற்று கூடும்… அரைத்தெடுப்பதும் சற்று சுலபமாக இருக்கும்). துவையலை அரைத்து அதை வழித்து, உருண்டை பிடித்து, அம்மியிலையே வைத்து ஒரு கிண்ணத்தை வைத்து மூடி வைத்துவிடுவார்கள். அம்மா அந்த பக்கம் சென்றதும் ஒரு விரலில் துவையலை எடுத்து உள்ளங்கையில்  வைத்து நக்கி நக்கி தின்றதெல்லாம் ஒரு அழகான கனாக்காலம். 

யார் மேலாவது கோபம் வந்தா, ரெண்டு பத்தை தேங்காயை  அம்மில வைத்து, எண்ணெயில் வறுத் தெடுத்த உளுத்தம் பருப்பு, கொஞ்சம் புளி சுவைக்கு உப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து ணங், ணங்ன்று அம்மிக் குழவியை வைத்து தட்டி,  துவையல் செய்து அரைத்து முடிக்கும்போது... கோவமா யார் மேல்? நானா... எப்போது கோபம்கொண்டேன்? என்று கேள்வியை எல்லாம் நம்மைப் பார்த்து நாமே கேட்டுக்கொள்வோம். கோபம் இருந்த இடம் தெரியாமல் போயே போயிருக்கும். (கோபம் தீர ஒரு அருமருந்து அம்மியில் அரைத்து எடுப்பது என்றால் மிகையன்று)

ம்மியில் அரைத்து வைத்த மசாலா சேர்த்த வத்தக் குழம்பு... மண் சட்டியில் சுண்ட வைத்து, மறுநாள் தின்றால் அதன் ருசி அருமையோ அருமை. குழம்பு தீர்ந்து போன பின்னர் சட்டியில் சோற்றைப் போட்டு பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பிசைந்து,  கையை முகர்ந்து பார்த்தால் ஒரு விதமான மணம்வரும் பாருங்கள்… அடடடடட அட! இதெல்லாம் யாருடைய கைப்பக்குவம் என்று நினைத்தீர்கள்...? எல்லாப் புகழும் அம்மியில் அரைத்த மசாலாவுக்குத்தான்.

அம்மியில் அரைப்பு என்பது ஒரு வகையான உடற்பயிற்சி. உடம்பில் உள்ள கொழுப்பை படிப்படியாகக் குறைக்க வல்லது. மொத்தத்தில் அம்மியில் அரைத்தல் என்பது ஒரு கலை. அது அரைத்தவர்களுக்குத்தான் தெரியும். அதன் சுவையும் இனிமையும். எத்தனையோ கலைகளையும், சுகங்களையும் தொலைத்துக்கொண்டு இன்றைய ஆடம்பரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இனியாவது அம்மியில் பொருட்களை வைத்து, அரைத்தெடுத்து உணவினை ருசிப்போம். வாழ்க்கையை ரசிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com