சர்க்கரை நோய்க்கு அருமருந்து தர்பைப் புல் குடிநீர்!

சர்க்கரை நோய்க்கு அருமருந்து தர்பைப் புல் குடிநீர்!

‘தர்பை’ என்றவுடனே ஏதோ சாங்கியத்துக்கான புல் என்று எண்ண வேண்டாம். இதன் மகத்துவம் ஏராளமானது. இந்தப் புல் புண்ணிய பூமி தவிர, வேறு எங்கும் முளைக்காது. இது வளர தண்ணீர் தேவையில்லை. அதோடு, பல நாட்களுக்கு இதை தண்ணீரில் போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். மேலும், இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்று நோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீரில் கூட போட்டு வைக்கிறோம்.

தர்பை புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு, ஐம்பொன் உலோக படிமங்களை இந்தப் புல்லின் சாம்பல் கொண்டு தேய்க்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். மேலும் இது இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. மூவகை தோஷங்களாகிய வாத, பித்த, கபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி உடலை சமநிலைப்படுத்துவதனால் தர்பை ஒரு அருமருந்தெனவே குறிப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். இதை, ‘ஹாரித்ரமேஹம்’ என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதுபோன்ற சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்த சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அவர்கள் தர்பை குடிநீர் அருந்துவதால் மேற்சொன்ன உபாதைகள் குணமாகிறது. சரி, தர்பை குடிநீர் எப்படி தயாரிப்பது?

சுமார் 15 கிராம் தர்பைப் புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி குளிர்ந்த பிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பல முறை சிறிது சிறிதாகப் பருகி வர மேற்சொன்ன உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்பை குடிநீர் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருக்கும். அவர்கள் தர்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவ குணங்களை நம்மால் பெற இயலும்.  இதற்கு, ஹிமகஷாயம்’ என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. தர்பைப் புல்லுக்கு மேலும் சில மருத்துவ குணங்களும் உள்ளன. இது உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்பை குடிநீர் வெயில் காலத்தில் அருந்த வேண்டிய அற்புதமான பானமாகும். சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்பைப் புல்லுக்கு இருக்கிறது. நாவுக்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தருகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com