
மிளகு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இது மட்டுமின்றி இந்தியாவில் பரவலாக எல்லா மாநிலங்களிலும் மிளகு உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிது மிளகு தூக்கலாக தட்டிப்போட்டு செய்யும் உணவுகளை உண்பதால், உடலில் உள்ள பல பிரச்சினைகள் நீங்குகிறது. இப்படி நம்முடைய தினசரி உணவில் தேவைப்படும் காரத்தையும், அத்துடன் உடலுக்கு பல பலன்களையும் சேர்த்து கொடுக்கிறது மிளகு.
இத்தகைய மூலிகைப் பண்புகளைக் கொண்டிருக்கும் மிளகைப் பயன்படுத்தி எப்படி சாதம் செய்வது எனப் பார்க்கலாம்.
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
அரிசி - 1 கப்
வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
முந்திரி - 4
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் மிளகையும், சீரகத்தையும் நன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வேர்க்கடலையை கடாயில் போட்டு வறுத்து, தோலை உரித்து வைத்துக் கொள்ளவும். முந்திரியையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் சாதத்தை வடித்து உதிரி உதிரியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வானொலியில் எண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு நன்றாகப் பொறிந்ததும் அதில் வேர்க்கடலை, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் சீரகம் மிளகுத்தூளை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சிறிதளவு உப்பு சேர்த்து வெள்ளை சாதத்தை அதனுடன் சேர்த்து கிளறவும். மிளகு கலவை சாதத்தில் எல்லா பக்கமும் பரவும்படி கிளறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இறுதியில் கொத்தமல்லி தழையை மேலே தூவி இறக்கினால், கமகமக்கும் மிளகு சாதம் தயார்.