பொரி அல்வா
பொரி அல்வா

பொரி அல்வா!

-சுரேஷ் தட்சிணா மூர்த்தி

தேவையானவை:

பொரி : 2 கப்

வெல்லம்: 1 கப் ( இனிப்பு அதிகமாகத் தேவைப்பட்டால் இன்னொரு கால் கப் எடுத்துக் கொள்ளலாம்)

நெய் : 5 ஸ்பூன் ( 100 மிலி)

முந்திரி : ஒரு பத்து எண்ணம்

பாதாம் : ஒரு நாலு

ஏலக்காய் பொடி: 1 ஸ்பூன்

ஃபுட்கலர்: ஒரு சிட்டிகை ஒரு துளி போதும்

செய்முறை:

பொரியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசி தூசி, அழுக்கெல்லாம் வெளியேற்றி விட்டு, மறுபடி தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊறவைத்து நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து ஒரு மிக்ஸி ஜார்க்கு மாற்றிக் கொள்ளவும்

வாணலியில் ஒரு கப் வெல்லத்துக்கு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சிம் மோடில் கொதிக்க விடவும். கம்பி பதம் எல்லாம் வேண்டாம், வெல்லம் நன்கு கரைந்தால் போதும்.

பாகைச் சற்று ஆறவைத்து பொரியோடு சேர்த்து மிக்ஸிஜாரில் நன்கு மாவாக அரைத்துக் கொள்ளவும். (பொரி நன்றாக ஊறியிருந்தால் மட்டுமே மாவாக இருக்கும், இல்லையென்றால் பொடி பொடியாய் தெரியும்)

வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரிப் பருப்பை இரண்டு, நான்காக உடைத்து பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, அரைத்த கலவையை அதன் மேல் விட்டு, ஃபுட் கலர் சேர்த்து, மேலும் அரை கப் தண்ணீர் விட்டு மிக்ஸி ஜாரைக் கழுவி ஊற்றிவிட்டு, ஒரு கரண்டியால் கை விடாமல் கிளறவும்,

மெல்ல ஒரு ஐந்து நிமிடத்தில் கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்.அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கிளறிக் கொண்டே மீதி 3 ஸ்பூன் நெய்யை அவ்வப்போது அரை அரை ஸ்பூனாக விட்டுக் கொண்டே இருக்கவும்.

மெல்லக் கலவை அல்வா பதத்துக்கு வரும், இந்த சமயத்தில் ஏலக்காய் பொடி சேர்க்கவும். மெல்ல சட்டியில் ஒட்டாமல் கரகரவென கரண்டி இழுத்த இழுப்புக்கு வரும் காதலியாய்ச் சுற்றும் ! இதான் பதம்.

அடுப்பை அணைத்து விடவும்!

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நெய் தடவி அல்வாவைப் பரப்பவும்.

நாலைந்து பாதாம்களை, ஓரிரண்டு முந்திரிகளையும் நீள வாக்கில் நறுக்கி அழகாக மேல் தூவவும்!

சற்று ஆறியதும் பரிமாறலாம்!

பொரி அல்வாவை சூடாகச் சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்!

ஃபுட் கலர் சேர்க்க இஷ்டமில்லை என்றால், சர்க்கரையை காரமலைஸ் செய்து சேர்க்கலாம்! இல்லை சேர்க்காமலே கூட வெல்லக் கலரிலேயே கூடச் சாப்பிடலாம்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com