சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்னன்னு தெரியுமா?

சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்னன்னு தெரியுமா?

நினைவு தெரிந்த வயதில் அப்பா "அடடா... ஆபீஸ்க்கு லேட்டாயிடுச்சு! டிபன் இன்னும் ரெடி ஆகலையா பத்மா?" என்று கேட்கும்போது, அம்மா வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டாகக் கிள்ளிய மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து மெலிதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய், கறிவேப்பிலை சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கொதிக்கும்போது ரவையை மெதுவாகத் தூவினாற் (தூவற அழகிருக்கே... அட அட அட... வெண் பனிச்சாரல் போல் அழகாய்...) போல் கொட்டி 2 நிமிடம் கிளறி தீயைக் குறைத்து மூடி வைத்து அப்பாவிற்கு சுட சுட சர்க்கரையுடன் சேர்த்து பரிமாறுவார்கள். இது கண்முன்னே காட்சிகளாய்.

அதேபோல் நான் பள்ளி விட்டு வந்ததும், "ம்மா... பசிக்குது சூடா என்ன டிஃபன் இருக்கு என்று கேட்கும்போது வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், இஞ்சி எல்லாம் சேர்த்து ஒரு வெஜிடபிள் உப்புமா செய்து தருவார்கள். ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி அதனுள் அந்த உப்புமாவை வைத்து தட்டில் ஸ்கூப் ஸ்கூப்பா கவிழ்த்து தருவார்கள். அதை சாப்பிட களைப்பெல்லாம் நீங்கி பிரஷ்ஷாக படிக்க உட்காருவேன்.

இப்போதும் என் மனது எப்போதெல்லாம் சோர்வடைகிறதோ, அப்போதெல்லாம்... கெட்டி அவலை ஊறவைத்து (மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி) கொள்வேன். உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து, சிறிது வதங்கியதும் உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும் வரை கிளறி, ஊறிய அவலை சேர்த்து, நன்கு கலந்து தேங்காய் துருவல் பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து சாப்பிட... சோர்வான மூளை சுறுசுறுப்பாகி ஆடிப் பாட ஆரம்பித்து விடுவேன்.

நான் மிகவும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில்  எனது சமையல் அறைக்கு வந்து செய்வதும் 'உப்புமா' வைத்தான். 

அதிலும் குறிப்பாக அரிசி ரவா, பருப்பு உப்புமா.

கடலைப் பருப்பு, துவரம்பருப்பு கால் கப் எடுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து அரை கப் அரிசி ரவையுடன் கலந்து வைத்திருப்பேன். (இது எங்கள் வீட்டில் எப்போதும் ஸ்டாக் இருக்கும்) வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அதில் 4 காய்ந்த மிளகாய் சிறிதளவு தேங்காய் துருவல், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து எல்லாம் சேர்த்து கொதிக்கும்போது பருப்பு, அரிசி ரவை கலவையை அதில் போட்டுக் கிளறி சற்று தளதளவென்று இருக்கும்பொழுது தீயைக் குறைத்து மூடி வைத்து நன்கு வேகவிட்டு இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு மொட்டை மாடியில் நிலா, நட்சத்திரங்களைப் பார்த்து சாப்பிடும்போது, என்னுடைய சந்தோஷம் இரட்டிப்பாகும்.

எனது முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது எனக்கு மிகவும் பிடித்தமான உணவு மக்காசோள ரவை உப்புமா. இதை வாரத்தில் ஐந்து நாட்கள் எடுத்துக் கொள்வேன். தொட்டுக்கொள்ள மட்டும் விதவிதமான சட்னிகள். மல்லி சட்னி, வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி சாம்பார்.  

எத்தனை கவலைகள், 

எத்தனை பிரச்சினைகள், 

என்னுள் எழுந்ததாலும்

ஒரு கப் ரவை உப்புமா எடுத்து… அதன்மேல் உருக்கிய நெய் சிறிது சேர்த்து சுட சுட சாப்பிட கவலையெல்லாம் போன இடம் தெரியாது. 

நீங்களும் முயற்சித்துதான் பாருங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com