மெது மெதுன்னு சப்பாத்தி வேணுமா? அப்போ இதைப் படிங்க!

மெது மெதுன்னு சப்பாத்தி வேணுமா? அப்போ இதைப் படிங்க!

சிலருக்கு நெகிழ்வாக மாவு பிசைந்தாலும் கூட சப்பாத்தி மெது மெதுவென்று சாஃப்ட்டாகச் செய்ய வராது. ஒவ்வொரு முறையும் அந்த முயற்சியில் தோல்வி கண்டு ”ஏம்மா ஒரு ஆலு சப்பாத்தி ஒழுங்கா பண்ண வராதா உனக்கு?” என கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் குற்றவாளி போல நிற்க வேண்டியதாகி விடும். அதென்ன அத்தனை பெரிய உணவுத்தொழில்நுட்பமா? இதைக் கற்றுக் கொள்ள கேட்டரிங் மேனேஜ்மெண்ட் கோர்ஸா படிச்சுட்டு வரனும்? அதெல்லாம் வேண்டாங்க. எல்லாமே அனுபவ அறிவு தான். ஒரு தடவை செய்து சரியா வரலைன்னா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மாதிரி என்ன செய்தா அந்தக் குறையை நிவர்த்தி பண்ணலாம்னு தேடு தேடுன்னு தேடி ஒரு சரியான பதிலைக் கண்டுபிடிச்சுடறது தான் அதற்கான ஒரே தீர்வு.

இங்க நான் எப்படி சப்பாத்தி செய்வேன்னு உங்களுக்கு சொல்றேன்.

· சப்பாத்திக்கு மாவு பிசையறதுன்னா, அதை சுடறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடியே பிசைஞ்சு வைச்சுடறது நல்லது. அப்போ தான் மாவு நல்லா ஊறி அதுக்கு சாஃப்ட்னெஸ் கிடைக்கும்.

· சிலர் சொல்ற மாதிரி நிறைய எண்ணெய் விட்டுப் பிசைஞ்சா சப்பாத்தி சாஃப்ட்டா வரும்கறது நிஜமில்லை. அப்படி செய்யறதால சப்பாத்தி சுடும் போது அது அப்பளம் மாதிரி உடையற அளவுக்கு வறட் வறட்டுன்னு ஆயிடும்.

· வேணும்னா நீங்க பட்டர் பயன்படுத்தலாம். அதை சூடு பண்ணாம அப்படியே 5 நிமிசம் வெளிய எடுத்து வைச்சுட்டு அழுத்திப் பிசைஞ்சு சப்பாத்தி மாவுல கலந்து ட வேண்டியது தான்.

· மிதமான சூட்டுல இருக்கற வெந்நீர் ஊற்றியும் மாவு பிசையலாம்.

· எல்லாத்தையும் விட முக்கியமான சீக்ரெட் இன்னொன்னு இருக்கு. அது என்னன்னா? சப்பாத்தி மாவு பிசையும் போதும் சரி, கல்லுல சுட்டு எடுக்கும் போதும் சரி துளி எண்ணெய் கூட யூஸ் பண்ணாம அதை திரட்டும் போது மட்டும் சதுரமா மடக்கி மடக்கி தேய்ச்சு எடுக்கையில் துளி எண்ணெய் தடவி மடிச்சுத் தேய்ச்சு எடுத்தா போதும் விளம்பரங்கள்ல காட்டுற மாதிரி புஸ்ஸுன்னு பூரி மாதிரியே உப்பலான சாஃப்ட் சப்பாத்தி கிடைக்கும்.

· கடைசியா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. சப்பாத்தி மாவை பிசையும் போது உங்க மனசுல இருக்கற கோபத்தை எல்லாம் கைக்கு கொண்டு வந்து மாவை உண்டு இல்லைன்னு பண்ணிடுங்க. அவ்வளவு ஏன்? உங்க கணவரை ரெண்டு சாத்து சாத்தறதா நினைச்சுக்கூட மாவை ஓங்கி அறைந்து பிசையலாம்.

இப்படி ஒரு சிற்பி எப்படி அருமையான சிற்பம் செதுக்க உளியால இஞ்ச் இஞ்ச்சா மெனக்கெடுறாரோ? அதே மாதிரி தாங்க சப்பாத்தி மாவு பிசையற வேலையும். அவ்வளவு கவனக் குவிப்பு தேவைப்படும் பார்த்துக்கோங்க.

சரி இப்போ ஒரு வழியா மாவு பிசைஞ்சு முடிச்சாச்சு இல்ல... பிறகென்ன அப்படியே ஒரு துணியப் போட்டு மூடி அடுப்படில வச்சுட்டு ஒரு மணி நேரமோ, ரெண்டு மணி நேரமோ கழிச்சு வந்து சுட்டு அடுக்க வேண்டியது தான் பாக்கி.

சப்பாத்திக்கு நிறைய பேர் உருளைக் கிழங்கு சப்ஜி, காய்கறி குருமா, ஏன் தேங்காய் சட்னி கூட சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடறாங்க. சிம்பிளா நான் ஒன்னு சொல்றேன். இப்படிச் செய்து சாப்பிட்டுப் பாருங்க.. அடுத்தடுத்து இதையே தான் ஃபாலோ பண்ணத் தோணும்.

தக்காளி பஜ்ஜி செய்முறை…

ஒன்னுமில்லங்க... 4 தக்காளி, ரெண்டு பெரிய வெங்காயம்( சின்ன வெங்காயம் போட்டா இன்னும் டேஸ்ட்டா இருக்கும், ஆனா, நேரமாகும்) ரெண்டு பச்சை மிளகாய், நல்லா பொடியா கட் பண்ணிக்கோங்க. வாணலியை சூடு பண்ணி ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளிச்சு அரை ஸ்பூன் சீரகம் போட்டு வெடிச்சதும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நல்லா வதக்குங்க. வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் தக்காளியைச் சேர்த்து நல்லா வதங்கினதும் ஒரே ஒரு குழிக்கரண்டி தண்ணி விடுங்க. அதுல கொஞ்சம் மஞ்சள் தூள், மசாலாத்தூள் சேர்த்துப் பிரட்டி விடுங்க. அப்புறம் அடுப்பை சிம்ல வச்சு 7 நிமிசம் கழிச்சு வாணலியைத் திறந்து பார்த்தா எண்ணெய் மிதக்க தக்காளித் பஜ்ஜி தயார். நல்லா ஞாபகமிருக்கட்டும் எண்ணெய் மிதக்கனும்கறதுக்காக தனியா நிறைய எண்ணெய் சேர்த்துடக் கூடாது. மொதல்ல சேர்த்த அந்த ரெண்டு டீஸ்பூனே போதும்.

இது குழந்தைங்கலருந்து பெரியவங்க வரை எல்லோருக்குமே பிடிச்சுப் போகற விதமான ஒரு டேஸ்ட்!

முயற்சி செஞ்சு பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com