ஓமப்பொடி வடாம் வத்தல் போடணுமா? இப்டி பண்ணி பாருங்க... ரொம்பவே ஈசி!

ஓமப்பொடி வடாம் வத்தல் போடணுமா? இப்டி பண்ணி பாருங்க... ரொம்பவே ஈசி!

ஓமப்பொடி, கட்டை வடாம் :

வடாம் போட ஏற்ற டைம் மார்ச் ஏப்ரல் தான். மே மாதம் வெயில் அதிகம் இருந்தாலும் கூடவே காற்றும் அடிப்பதால் மண், தூசி போன்றவை, நாம் கஷ்டப்பட்டு போடும் வடாமில் கலந்து விடும். எனக்கு மே மாசம் தான் டைம் இருக்கும் என்று நினைப்பவர்கள் தரையில் போடாமல் டேபிள் அல்லது பெஞ்சை மொட்டை மாடியில் போட்டு அதன் மேல் பிளாஸ்டிக் ஷீட் விரித்து போட மண், தூசு கலக்காமல் போட முடியும்.

தேவையனவை:

பச்சரிசி - ஒரு கிலோ

ஜவ்வரிசி - 200 கிராம்

உப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 15

பெருங்காயம் - சிறிது

தண்ணீர் - 1:2 - 1/2 கப்

மாவு அரிசி அல்லது ரேஷன் அரிசி வடாம் போட ஏற்றது. அரிசியையும் ஜவ்வரிசியையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கவும்.

அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் ஒன்றுக்கு இரண்டரை மடங்கு தண்ணீர் அளந்து எடுத்து குக்கரில் விட்டு கொதிக்க விடவும். நடுக் கொதி வரும்போது பச்சை மிளகாய், கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொதிக்கும் தண்ணீரில் கலந்து விடவும்.

அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து அரிசி மாவை சிறிது சிறிதாக கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும். நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சம் பழச்சாறு (இரண்டு எலுமிச்சம்பழம்) கலந்து ஆறியதும் மாவை உருண்டைகளாக உருட்டி ஓமப்பொடி அச்சில் போட்டு பிழியவும்.

மொட்டை மாடியில் நன்கு வெயில் வரும் இடமாக பார்த்து பிளாஸ்டிக் சீட் விரித்து ஓமப்பொடி அச்சில் அல்லது கட்டை வடாம் அச்சில் பிழிந்து நான்கு நாட்கள் வெயிலில் நன்கு காய விட்டு எடுத்து பத்திரப்படுத்தவும்.

தேவைப்படும்போது எண்ணெயை காய வைத்து வடாமை பொரித்தெடுக்க சுவையான ஓமப்பொடி, கட்டைவடாம் ரெடி.

டிப்ஸ்:

1) மாவரிசி தான் வடாமுக்கு ஏற்றது.

2) 5:1 - 5 கப் அரிசி ஒரு கப் ஜவ்வரிசி

3) சுவையைக் கூட்டவும் வடாம் வெளுப்பாக வரவும் எலுமிச்சம் பழச்சாறு அவசியம்.

4) பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப உபயோகிக்கவும்.

5) பெருங்காயம் பொடியை விட பெருங்காய கட்டியை உபயோகிக்கவும்.

6) வடாம் போட மார்ச் ஏப்ரல் மாதம் தான் சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com