சுலபமான மார்கழி நைவேத்தியங்கள்!

சுலபமான மார்கழி நைவேத்தியங்கள்!

மார்கழி மாதம் பக்தி பரவசமான மாதம்... பண்டிகைகள் கலந்து கட்டி வர ஆரம்பிக்கும். எப்பவும் வெண்பொங்கல், சேமியா பாயசம் ரவா கேசரிதானா! சுவாமிக்கு வித்தியாசமாக இந்த முறை நெய்வேத்தியம் செய்யலாமே!

தினை கேசரி 

தினை அரிசி - ஒரு கப்

 பொடித்த பனைவெல்லம் - ஒரு கப்

கசகசா - ஒரு டீஸ்பூன் 

முந்திரி பருப்பு 10 

தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்

 ஏலக்காய் தூள் - சிட்டிகை 

நெய் - மூன்று டீஸ்பூன்

தினை அரிசி ஊற வைத்து ஒரு கப் திணைக்கு இரண்டு கப் நீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். பொடித்த பனைவெல்லத்தை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து, கொதிக்க வைத்து வடிகட்டவும். வானொலியில் நெய் விட்டு கசகசா முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து ஏலக்காய் தூள் தூவவும். வெந்த தினை, பனைவெல்ல கரைசல் விட்டு நன்கு கிளறி இறக்க வாசமான தினை கேசரி ரெடி.

----------------------

கோதுமை மாவு லட்டு

கோதுமை மாவு - ஒரு கப் 

பொடித்த வெல்லம் - ஒரு கப் 

நெய் 50 கிராம் 

ஏலக்காய் தூள் -கால் டீஸ்பூன்

வறுத்த முந்திரி திராட்சை தலா 5

கோதுமை மாவை சிவக்க வறுக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம், வறுத்து பொடித்த முந்திரி திராட்சை ஏலக்காய் தூள் மீதமுள்ள நெய் சேர்த்து பிசைந்து குட்டி குட்டி லட்டுகளாக பிடிக்கவும். உங்கள் வீட்டு குட்டிம்மாக்கு பிடித்த லட்டு ரெடி.

----------------------

இனிப்பு பணியாரம்

கேழ்வரகு மாவு, கம்பு மாவு  தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப் 

சுக்கு பொடி - கால் டீஸ்பூன்

ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்

நெய் - அரை கப் 

வறுத்த வேர்க்கடலை - கால் கப்

கேழ்வரகு மாவு, கம்பு மாவு, தேங்காய் துருவல், சுக்கு பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வறுத்த வேர்க்கடலை ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்க்கவும். பணியார கல்லை சூடாக்கி, சிறிதளவு நெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

----------------------

கடலைப்பருப்பு இனிப்பு கேசரி

கடலைப்பருப்பு - ஒரு கப் 

பொடித்த வெல்லம் - அரை கப் தேங்காய் துருவல் -கால் கப்

முந்திரி பருப்பு -10 குட்டி குட்டியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஏலக்காய் தூள்-கால் டீஸ்பூன்

நெய் சிறிதளவு.

கடலை பருப்பை நன்றாக வேக வைத்து மிக்ஸியில் அரைக்கவும் வாணலியில் நெய் விட்டு... அரைத்த கடலை பருப்பு விழுது, பொடித்த வெல்லம், தேங்காய் துருவ,ல் முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.

வாயில் போட்டால் கரையும் இந்த கடலைப்பருப்பு கேசரி.

----------------------

பூசணி விதை இனிப்பு

தோல் நீக்கிய பூசணி விதை- ஒரு கப்

பால்- இரண்டு கப்

சர்க்கரை -ஒரு கப்

பூசணி விதையை நான்கு மணி நேரம் ஊற விடவும் பிறகு சொரசொரப்பான தரையில் மெதுவாக தேய்த்து அதன் தோலை நீக்கி விடவும். பின்பு நன்கு கழுவி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை பால் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் நன்கு கிளறவும். 10 நிமிடம் கழித்து இறக்கவும். (எடுத்து சாப்பிடும் பதத்தில் சற்று கெட்டியாகவே இருக்கும்)

சற்று நீர்க்க பாயசம் போல் தேவை எனில் மேலும் ஒரு அரை கப் பால் சேர்த்து கொள்ளவும்.

நெய்யில் முந்திரி திராட்சை சேர்ப்பது அவரவர் விருப்பம்.

----------------------

(நைவேத்திய) பால்கீர்

கெட்டியான பசும்பால்- ஒரு கப்

சர்க்கரை -2 டீஸ்பூன்

பாதாம் பவுடர் - இரண்டு டீஸ்பூன்

கன்டென்ஸ்ட் மில்க்- இரண்டு டேபிள் ஸ்பூன் 

முந்திரி, திராட்சை நெய்- சிறிதளவு குங்குமப்பூ ஒரு சிட்டிகை.

பாலில் சர்க்கரையை போட்டு, அது கரைந்ததும் அதனுடன் பாதாம் பவுடர் கண்டென்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்‌. கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி வைத்து முந்திரி யை நெய்யில் வறுத்து போடவும். குங்குமப்பூவை மேலே தூவவும் நிமிஷத்தில் நைவேத்திய கீர்ரெடி.

----------------------

தேங்காய் கேரட் அல்வா

துருவிய கேரட், (வெள்ளையாக) துருவிய தேங்காய் துருவல்- தலா ஒரு கப் 

சர்க்கரை- இரண்டு கப் 

நெய் -100 கிராம் 

ஏலக்காய் தூள்- சிட்டிகை 

அடி கனமான வாணலியில் நெய் விட்டு கேரட் துருவல், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் .பாதி வதங்கிய பின் சர்க்கரை சேர்க்கவும். கலவையைக் கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல் வரும் சமயம் இறக்கி ஏலக்காய் தூள் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

----------------------

இளநீர் இனிப்பு பாயசம்

பால் -நான்கு கப்

 தேங்காய் பால் -ஒரு கப்

 இளம் வழுக்கை( இளநீர்) பொடியாக நறுக்கியது- ஒரு கப் 

சர்க்கரை -ஒரு கப் 

பாலை சர்க்கரை சேர்த்து ,15 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்‌. சற்று ஆறியதும் இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால் சேர்த்து குளிர வைத்து பரிமாறவும்.(இளநீர் வழுக்கை கையில் இருந்தால் நிமிசத்தில் இந்த பாயாசத்தை தயார் செய்துவிடலாம்.)

... இப்படி விதவிதமாக நைவேத்தியங்கள் செய்து குடும்பம் உறவு நட்புடன் பகிர்ந்து மார்கழியைக் கொண்டாடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com