ஆரோக்கியம் தரும் தினைப் பணியாரம்!
பொதுவாகவே சிறுதானிய உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனக் கூறுவார்கள். அப்படிப்பட்ட சிறுதானியம் என்றாலே தினை பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிலும் சிறு பிள்ளைகள் கட்டாயம் தினையை சாப்பிட வேண்டும் எனச் சொல்வார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், தினை அரிசியில் நார் சத்துக்கள், உடலுக்குத் தேவையான விட்டமின் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் நிறைந்துள்ளது.
இத்தனை சத்துக்கள் இதில் நிறைந்திருந்தாலும், குழந்தைகள் சாப்பிடும்படி இதை பெரும்பாலானவர்கள் ருசியாக செய்வதில்லை. இது உடல் எடை குறைப்புக்கு அதிகம் உதவுகிறது. சிறுதானியங்களை பயன்படுத்தி நாம் பல வகையான உணவுகளை செய்யலாம். சிறுதானிய சாதம், சிறுதானிய இட்லி, தோசை மிகவும் பிரபலமானதாகும்.
இதுவே அனைவரும் விரும்பும் படி சுவையாக சிறுதானிய உணவை சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்? இந்த பதிவில் எல்லாருக்கும் பிடித்தவகையில் சுவையான தினைப் பணியாரம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 1
வெல்லம் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு
தினை அரிசி - ஒரு டம்ளர்
பச்சரிசி - கால் டம்ளர்
தேங்காய் துருவல் - அரை கப்
சோடா உப்பு - சிறிதளவு
செய்முறை:
முதலில் பச்சரிசி, தினை அரிசி இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து, இரண்டையும் ஒன்றாகப் போட்டு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் இது ஊரியதும் மிக்சியில் போட்டு தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். அடுத்ததாக இந்த மாவை சுமார் 4 முதல் 5 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
மாவு புளித்ததும் அதில் வெல்லம், சோட்டா உப்பு, வாழைப்பழம் சேர்த்து பிசைந்து, பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி இந்த மாவை ஊற்றவும். அடிப்பகுதியில் வெந்ததும் பணியாரத்தை திருப்பிப்போட்டு வேக வைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான தினைப் பணியாரம் தயார். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே ருசித்து உண்பார்கள். சுவை நன்றாக இருக்கும்.