ஆரோக்கியம் தரும் ‘பழ’ இனிப்புகள்!

Healthy sweets made from fruits
Healthy sweets made from fruits
Deepavali 2023
Deepavali 2023

பண்டிகை நாட்களில் இனிப்பும் சாப்பிட வேண்டும். நம் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உதவும் ஸ்வீட்கள் இதோ! இந்த தீபாவளிக்கு செய்து அனைவரையும் அசத்துங்கள்.

அத்திப்படி ரசமலாய்

அத்திப்பழம் கர்ப்பப்பைக்கு நல்ல வலுவைத் தருகிறது. ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் நோய், மூல நோய், கண் கோளாறுகள், மூளைக் கோளாறு ஆகிய நோய்களை நீக்கவல்லது.

தேவையான பொருட்கள்:

துருவிய அத்திப் பழம் – 1 கப், துருவிய பனீர் – 1½  கப், பால் பவுடர் - தேவையான அளவு, பால் - 1 லிட்டர், ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன், முந்திரி, பாதாம் - சிறிதளவ சர்க்கரை – ½ கப்.

செய்முறை:

பாலை நன்றாகக் கொதிக்க வைத்து, கெட்டியானதும், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். ஒரு பாத்திரத்தில் துருவிய அத்திப்பழம், பனீர், பால் பவுடரைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். கையில் சிறிதளவு நெய்யைத் தடவி, பிசைந்த கலவையிலிருந்து எடுத்து, சிறு உருண்டையாகத் தயார் செய்து, பாலில் போட்டு, பொடி செய்த முந்திரி, பாதாமைத் தூவி பரிமாறவும்.

ஆப்பிள் போளி

‘தினமும் ஒரு ஆப்பிள், டாக்டரைக் கிட்ட சேர்க்காது' என்ற பழமொழி உங்ளுக்குத் தெரியுமே! ரத்தசோகைக்கு ஆப்பிள் ஒரு நல்ல மருந்து.

Apple Boli
Apple Boli

தேவையான பொருட்கள்:

மைதா – ½ கிலோ, ஆப்பிள் - ½ கிலோ, சர்க்கரை - 150 கிராம், வெண்ணெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்,  கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை:

மைதாவுடன் வெண்ணெய், உப்பு சேர்த்து தேவையான அளவு நீர்விட்டு , பூரி மாவு போல நன்றாகப் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி ஊற விடவும். ஆப்பிள் பழத்தைத் தோல் சீவி துண்டுகளாக்கி, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து,  பின் கடலை மாவை வறுத்துத் தனியே வைக்கவும்.

பின் வாணலியில் ஆப்பிள் விழுது, சர்க்கரை சேர்த்து சுமாரான தணலில் கிளறவும். நன்றாகச் சுருண்டு அல்வா போல் வந்ததும், 2 டீஸ்பூன் நெய், ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி, கடலை மாவு தூவி கிளறி  இறக்கவும்.

ஆறியதும் எலுமிச்சை அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து, பூரிக்கு இடுவது போல வட்டமாக இட்டு, அதன் நடுவே ஆப்பிள் பூரணத்தை வைத்து மூடி, பூரிக்கட்டையால் மீண்டும் வட்டமாக இடவும்.

அடுப்பில் தவா வைத்து, போளியைப் போட்டு, இருபுறமும் நெய் விட்டுச் சுட்டெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
பயத்தை அகற்றிக் காத்தருளும் அன்னை பிரத்யங்கிரா தேவி!
Healthy sweets made from fruits

பப்பாளிப் பணியாரம்

இந்தப் பணியாரம் சத்து மிகுந்த உணவுகளில் ஒன்று. பப்பாளி, செரிமானத்தை ஊக்குவிப்பதுடன் மலச்சிக்கலை அடியே விரட்டுகிறது.

Pappaya Paniyaram
Pappaya Paniyaram

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப், பப்பாளிப் பழ விழுது – ½  கப்,  துருவிய வெல்லம் ¼ கப், பால் - தேவைக்கேற்ப, பாதாம், முந்திரித் துருவல் – ¼ கப் கிஸ்மிஸ் 2 ஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை:

ரவையுடன் பப்பாளி விழுது, வெல்லம் சிறிதளவு பால், பாதாம், முந்திரி, கிஸ்மிஸ்  சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் நன்றாக கலந்து விட்ட  கலவை ரொம்பக் கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் ஊற்றிக் கலக்கவும். குழி பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் நெய் விட்டு, கலவையைக் குழியில் பாதியளவு ஊற்றி, மிதம் தீயில் வேகவிடவும். திருப்பிப் போட்டு நெய் விட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, சூடாகப் பரிமாறவும்.

டேட்ஸ் & காஜு டைமண்ட்ஸ்

பேரீச்சம்பழத்தை இரும்புச்சத்து மிக்க டானிக் என்றே சொல்வோம். எலும்பு வளர்ச்சி. நரம்பு உறுதி, மூளைக்கு, தலைக்கு இருதயத்துக்கு இவை மிகவும் நல்லது.

Kaaju kathli
Kaaju kathli

தேவையான பொருட்கள்:

பேரீச்சம் பழம்  - 15, காஜு கத்லி – 10, காய்ந்த கொப்பரைத் துருவல் – ½ கப், பால் – ½ கப்.

செய்முறை:

பேரீச்சம்பழத்தை பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் பேரீச்சம்பழத்தை மட்டும் எடுத்து கரகரப்பாக அரைக்கவும். ஒரு வாணலியில் அரைத்த பழ விழுது,  ஊற வைத்த பால், கையால் உதிர்த்த காஜு கத்லி ஆகியவற்றைப் போட்டு. நன்கு சுருண்டு, ஓரங்களில் ஒட்டாமல் வரும் வரை கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, கையில் நீரைத் தொட்டுச் சமப்படுத்தி, ஆறியதும் டைமண்ட் வடிவத்தில் துண்டுகளாகப் போட்டுப் பரிமாறவும்.

- தஸ்மிலா அஸ்கர்

 

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் அக்டோபர்  2003 இதழில் வெளியானது இந்த ரெசிபிக்கள். இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com